Latest News

May 16, 2015

யுத்தத்தின் போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து புதிய அரசு நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்- ஜேஸன் கென்னி
by Unknown - 0

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்  போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து புதிய அரசு நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என  கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சர்  ஜேஸன் கென்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி வரும்போதெல்லாம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக 25 ஆண்டுகளாக தமிழர்கள் அனுபவித்த துன்பங்களே நம் நினைவுக்கு வரும்.

கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் சேர்ந்து நானும் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூருகின்றேன். இலங்கையில் ஏற்பட்ட கொடுமையான யுத்தத்தின் காரணமாக ஏராளமான தமிழர்கள் கனடாவுக்கு அகதிகளாக வந்ததை நங்கள் நினைத்து பார்க்கின்றோம்.

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர வேண்டும் என்று கனடா அரசு உறுதிப்பூண்டுள்ளது. இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 40 ஆயிரம் தமிழர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என எமது நாட்டு அரசு தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றது.

இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2013ம் ஆண்டு இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தது போல் கனடா அரசு இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணைக்காக என்றும் வலியுறுத்தும்.

முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் இலங்கை தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவை புறக்கணித்துவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த புதிய அரசு இலங்கையில் உள்ள தமிழர்களுடன் நல்லுறவில் ஈடுபடும் என்றும் கடந்த ஆட்சியின் போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து நேர்மையாக விசாரணை நடத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நாம் மரியாதை செலுத்த விரும்பினால் இலங்கையின் புதிய அரசுடன் சேர்ந்தும் உலக நாடுகளூடன் சேர்ந்தும் உண்மை, நீதி ஆகியவை கிடைக்க பாடுபட வேண்டும்.

இதேவேளை  மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments