Latest News

May 06, 2015

பலவந்தமாக காணாமல்போதல் தொடர்பான ஐ.நா. செயற்குழு ஆகஸ்டில் வருகிறது!
by Unknown - 0

பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்கள் பற்றிய ஐ.நா. செயற்குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் கொண்டதாக இவர்களது பயணம் அமையவுள்ளது. 

பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்கள் பற்றிய செயற்குழுவானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கி வருவதுடன், இலங்கைக்கான விஜயத்திற்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து அந்த செயற்குழு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்திருந்த போதிலும் கடந்த 8 வருடங்களுக்கு அதிகமான காலமாக அந்த கோரிக்கைக்கு இலங்கை சார்பாக சாதகமான பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.  

அந்த செயற்குழுவினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27 ஆவது அமர்வுக்கு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம், 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் திகதி இலங்கை வருவதற்கான கோரிக்கை செயற்குழுவினால் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதற்கு மட்டுமல்லாது அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விஜயம் பற்றிய நினைவூட்டல்களுக்கும் அப்போதைய இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இலங்கை விஜயத்துக்கான கோரிக்கை பற்றி கடைசியாக நினைவூட்டப்பட்டிருக்கிறது.எனினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருந்த வரை செயற்குழுவுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பதில்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதன் இலங்கை விஜயம் தொடர்பில் மட்டும் சாதகமான பதில் எதையும் வழங்கியிருக்கவில்லை. 

அதுமட்டுமல்லாது, 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி வரையான மீளாய்வு காலப்பகுதிக்கு உட்பட்ட விடயங்களே, பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்கள் பற்றிய செயற்குழுவினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27 ஆவது அமர்வுக்கு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு உள்வாங்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த வகையில், மீளாய்வு காலத்தின் ஆரம்பத்தின் போது இலங்கை தொடர்பாக 5,676 விடயங்கள் நிலுவையில் இருந்ததுடன், மீளாய்வு கால நிறைவின் போது இலங்கை தொடர்பாக 5,731 விடயங்கள் நிலுவையில் இருந்ததாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அமர்வில் உரையாற்றிய தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்கள் பற்றிய செயற்குழுவின் வருகையை இலங்கை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.  

இவ்வாறான நிலைமையின் பின்னணியிலேயே, அந்த செயற்குழுவானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.  அடுத்துவரவுள்ள நாடுகளுக்கான விஜயங்களின் அட்டவணையில் பலவந்தமான அல்லது தன்னிச்சையற்ற காணாமல்போதல்கள் பற்றிய செயற்குழுவின் இலங்கைக்கான விஜயம் உள்வாங்கப்பட்டுள்ளது.  

இதேநேரம், இலங்கை மீதான போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் பற்றிய மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலத்தின் விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments