500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையான இலங்கை மத்திய வங்கியின் பிணைப்பத்திரங்களின் விற்பனையை தடுக்க ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 2006ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கான தூதுவராக பணியாற்றியவர் ரொபேர்ட் ஓ பிளேக். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய கடிதத்தினை விக்கிலீக்ஸ் தகவல் தளம் வெளியிட்டுள்ளது.
அக்கடிதத்தில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ஆட்சியின் போது இலங்கையின் அரசாங்கப் பிணைப்பத்திரம் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையானதாகவும் அதை வாங்கிய சர்வதேச முதலீட்டாளர்களில் 40 சதவீதம் பேர் அமெரிக்க முதலீட்டாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விற்பனையைத் தடுக்க எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நிலையான பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதற்காக மகிந்த அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர பல முயற்சிகளை மேற்கொண்டது.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த பத்திர விற்பனைக்கு முக்கியதுவம் கொடுக்கமாட்டோம் என்று எதிர்த்தனர்.
இதனால் முதலீட்டாளர்களிடம் சிறிது அச்சம் ஏற்பட்டது. அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை அரசாங்கம் நாட்டின் உள்கட்டமைப்புக்கு செலவிடும் என்று தெரிவித்தார்.
அப்போது இருந்த மகிந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை எதிர்க்கட்சிகள் இந்த விற்பனையை எதிர்ப்பதற்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அரசாங்கப் பத்திரங்கள் விற்பனையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற முதலீட்டாளர்களின் வேண்டுக்கோளை அரசாங்கம் சிறந்தமுறையில் பூர்த்தி செய்தது என்று எழுதியுள்ளார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய எதிர்ப்பாளர்கள் அரசாங்க பத்திர விற்பனை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்ற செயல் என ஊடகங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த விற்பனை பாராளுமன்றத்தின் செயல்பாட்டின் கீழ் நடைபெறவில்லை ஆகவே இது சட்டவிரோதமானது. மேலும் இதன் மூலம் அரசாங்கம் மக்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்ற முயற்சி செய்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தொடர்ந்து பதவிகளைக் கைப்பற்றிய மகிந்த ராஜபக்சவின் முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சியாலோ ரணில் விக்ரமசிங்கவினாலே தடுத்து நிறுத்த முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment