நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 1000 பேரை காணவில்லை என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
நோபாளத்தில் கடந்த 25ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பலியாகியுள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்த விபரங்களை சேகரிப்பதற்காக ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் குழு காத்மாண்டு சென்றுள்ளது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவர் RENSJE TEERINK நிலநடுக்கம் எதிரொலியாக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ஆயிரம் பேரை காணவில்லை எனக் கூறினார்.
நேபாள அரசு நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருவதாகக் கூறினாலும் தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என ஆங்காங்கே கூக்குரல்கள் எழுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காத்மாண்டுவின் முக்கிய வீதிகளில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேபாளத்தில் சர்வதேச மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு மோப்ப நாய்களும் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் மீட்புக் குழுவினர் மோப்ப நாய்களில் காமிராவைப் பொருத்தி கட்டிட இடிபாடுகளுக்கிடையேயும் இடிந்து விழும் ஆபத்தில் உள்ள கட்டிடங்களிலும் அனுப்பி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் ஜப்பான் மீட்புக் குழுவினரும் நாய்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அவதிகளை ஒரு சந்தித்துக்கொண்டிருந்தாலும் மறுபுறம் இந்த பேரழிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை நேபாள மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு காத்மாண்டுவின் பல்வேறு பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments
Post a Comment