Latest News

May 19, 2015

தமிழின அழிப்பு நாள் மே 18 - தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!
by Unknown - 0

சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின்; மிகமோசமான படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடாத்தப்பட்டது.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:-

தமிழின அழிப்பு நாள் மே 18

”உண்மையும் நீதியும் நிரந்தரமானவை. அவை நிலைத்துள்ளன. அவை என்றும் நிலைத்து நிற்பன”

சிறிலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் மிகமோசமான படுகொலை 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடாத்தப்பட்டது.

தமிழினம் தனது பாரம்பரிய நிலத்தையும் மக்களையும் மொழியினையும் பாதுகாக்கும் பொருட்டு தமது இருப்பை பாதுகாத்த வேளை சிங்களப் பேரினவாத அரசு அனைத்துலக சட்டவிதிகளை மதியாது மருத்துவமனைகள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், பாதுகாப்பு வலயங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் எனத் தமிழ் மக்கள் வாழ்விடம் அனைத்திலும் கண்மூடித்தனமான விமான, எறிகணை, தாக்குதல்களாலும் கனரக ஆயுதம், கொத்து குண்டுகள், இரசாயனக் குண்டுகள் என சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களாலும் இலட்சக்கணக்கான தமிழ் உயிர்களை வயது வேறுபாடின்றி கொன்று குவித்து, பல கோடிக்கணக்கான சொத்துக்களையும் எமது இயற்கை வளங்களையும் அழித்து மே மாதத்தில் தனது திட்டமிட்ட தமிழினவழிப்பின் போர் வெற்றியைக் கொண்டாடியது மட்டுமல்லாது இன்று வரை தமிழின அழிப்பை நடாத்தி வருகின்றது.

சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பு கடந்த 67 ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இன அழிப்பால் எமது பாரம்பரிய நிலத்தை விட்டு இன்று  1 500 000 மக்கள் இடம்பெயர்ந்து புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

எமது நியாயமான கோரிக்கைகளையும் எமது அறவழிப் போராட்டங்களையும் உண்மையையும் உணர்ந்த அனைத்துலகம் தன்னால் தடுத்து நிறுத்த முடியாமற்போன தமிழின அழிப்பிற்கு முதல் தடவையாக மார்ச் 2014ல் மனித உரிமைக் கூட்டத்தொடரில் ஒரு கதவைத் திறந்துவிட்டது.

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முடிவெடுத்து நிபுணர்களை நியமித்தது. குறிப்பிட்ட நிபுணர்கள் தமது நீதி விசாரணையை நடாத்த தமிழின அழிப்பு நடந்த பகுதிகளுக்கு அவர்கள் செல்ல அனுமதி மறுத்ததுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சாட்சி கொடுக்கவிடாமல் தடைசெய்து தனது குற்றத்தை மறைக்க பெரும்பாடுபட்டது.

இருந்தும் தமிழ் மக்களின் விடாமுயற்சியினால் நிபுணர்குழு சாட்சிகளைத் திரட்டி தனது விசாரணையை பூர்த்தி செய்து அறிக்கை வெளியாகும் வேளையில் சிங்களப் பேரினவாத அரசு ஆட்சிமாற்றம் என்ற கபட நாடகத்தை அரங்கேற்றி இன்று இவ்வறிக்கை வெளியாவதை ஆறுமாத காலங்கள் பிற்போட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துலக நாடுகளில் நடைபெற்ற இன அழிப்பு வரலாற்றுப் பாடங்களாகக் கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளோம்.

பொஸ்னியா போர் நடந்த காலத்தில் சிறேபிறெனிக்காவில் (Srebrenica)  8000 முஸ்லிம் ஆண்களும் சிறுவர்களும் சேர்பியப் படைகளால் யூலை 1995 இல் படுகொலை செய்யப்பட்டனர். 400 பேர் கொண்ட நெதர்லாந்தைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புப் படை காவலுக்கு நின்றபோதும் அவர்கள் படுகொலையை தடுத்து நிறுத்தவில்லை.

இப்படுகொலையை விசாரணை செய்த ஜக்கிய நாடுகள் அவையின் அனைத்துலக நீதி மன்றம் (UN International Court of Justice) அதை “Genocide” என்று 2007ல் தீர்ப்பு வழங்கியது. சிறேபிறேனிக்காவில் கொல்லப்பட்டோரிலும் பார்க்கப் பன்மடங்கானோர் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். அதை “Genocide” என்று தீர்ப்பு வழங்க ஏன் தயக்கம் காட்டப்படுகிறது.

ஐநா வரலாற்றில் சிறேபிறேனிக்கா படுகொலைகள் ஒரு கறுப்பு அத்தியாயமாக இடம்பெறுகிறது என்றால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு  ஐநா வரலாற்றில் மிகமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது.

இன்று, தமிழரது பாராம்பரிய நிலங்கள் சிங்கள மயமாக்கப்படுவதோடு எமது அடையாளங்கள் யாவும் அழித்தொழிக்கப்பட்டு சிங்கள பாரம்பரியங்கள் நிலைநாட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

சிங்கள இராணுவத்தினரின் கெடுபிடியில் எமது பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள். ஆண்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தாயகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்மக்கள் பேச்சுரிமை மறுக்கப்பட்டு, எழுத்துரிமை பறிக்கப்பட்டு தமிழர் தாயகத்தில் திறந்த வெளிச் சிறைச்சாலையுள் நிம்மதியற்று பயபீதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சர்வதேசம் எமக்குத் திறந்துள்ள நீதிக்கான பாதையை எமது அறவழிப் போராட்டங்கள் மூலம் தமிழின அழிப்பை உறுதிசெய்ய உழைத்து மே 18 தமிழின அழிப்பு நாளில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற இலட்சியத்தை நிறைவேற்ற உறுதிபூணுவோம்.

- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
« PREV
NEXT »

No comments