மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சுமுகமாக இடம்பெற்றது.
இதன்போது 5 பிரதான அம்சங்கள் குறித்து ஆராயப் பட்டதோடு தொடர்ந்து இருதரப்பினரும் சந்தித்துப் பேசவும் உடன்பாடு காணப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இருதரப்பு சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான விடயங்களே பிரதானமாக ஆராயப் பட்டதோடு அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர், உள்ளுராட்சி சபைகளை கலைத்தல், அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக போட்டியிடுதல், வேட்பாளர்களுக்கு வேட்பு மனு வழங்குதல், விசேட குற்ற விசாரணைப் பிரிவு அரசியல் மயமாக்கப்பட்டு சில எம்.பி.க்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகிய விடயங்கள் குறித்து இதன் போது கவனத்திற் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர் பாக ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடி சந்திப்பொன்றை ஏற்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப் பினர்கள் இதற்கான முயற்சியை மேற் கொண்டிருந்தனர். இந்தச் சந்திப்புக்கு இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த 25ம் திகதி இதற்காக திகதி குறிக்கப்பட்டது. ஆனால் அந்தத் திகதியில் சந்திப்பு இடம்பெறாத நிலையில் நேற்று அதற்கான திகதி முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு இரு தலைவர்களும் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக நேற்று முன்தினம் இருதரப்பு பிரதிநிதிகளும் சந்தித்து ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இரு தலைவர்களும் உரிய நேரத்திற்கு தமது பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு வருகை தந்ததாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, துமிந்த திசாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன, பைசர் முஸ்தபா எம்.பி. ஆகியோர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, குமார வெல்கம, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அலஹப்பெரும, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா, சு.க. செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இருதரப்பு சந்திப்பு வெற்றியளித்ததாகவும் சுதந்திரக் கட்சியுடன் தொடர்புள்ள முக்கிய விடயங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை இருதரப்பு சந்திப்பு தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த சுதந்திரக் கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்சித் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கட்சி போசகர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் 5 பிரதான அம்சங்கள் ஆராயப்பட்டன. இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
இங்கு ஆராயப்பட்ட சகல விடயங் களையும் அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஆழமாக ஆராயவும் இதன்போது உடன்பாடு காணப்பட்டது. அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
மத்திய குழுவின் முடிவுகளுக்கு ஏற்ப கட்சியிலுள்ள சகலரும் ஒழுங்காக செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த்
இதேவேளை இரு தலைவர்களுக் குமிடையிலான சந்திப்பு குறித்து நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் எதுவித நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை. கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள், மதத் தலைவர்கள் அமைப்பாளர்கள் போன் றோர் இருதரப்பிற்கும் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த சந்திப்பு இடம்பெற்றது. சில சக்திகள் இந்த சந்திப்பை நிறுத்த முயற்சி செய்தன. இந்த சந்திப்பு குறித்து ஐ.தே.க. அச்சமடைந்துள்ளது.
ஒரே கட்சியாக ஒன்று பட்டு முன்னோக்கிச் செல்வதே எமது நோக்கமாகும். இந்த பேச்சுவார்த்தை ஆரம்பம் மட்டுமே. இந்தச் சந்திப்பு தொடர்ந்து இடம்பெறும் என்றார்.
No comments
Post a Comment