சொத்துக் குவிப்பி வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு முதற்கட்ட பார்வையில் சரியான தீர்ப்பாகவே தெரிவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு குறித்து, சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறும்போது, "சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக வாசிக்கும் முன்னர் எனது கருத்துகளை தெரிவிக்க முடியாது.
சாட்சியங்களை சரியாக பரிசீலித்து சரியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என்றே தீர்ப்பின் மீதான எனது முதற்கட்ட பார்வை உள்ளது. தீர்ப்பை முழுவதுமாக வாசித்து எனது கருத்துகளை கர்நாடக அரசுக்கு நான் தெரிவிப்பேன்.
ஏப்ரல் 22-ம் தேதியே இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நான் நியமிக்கப்பட்டேன். இந்த வழக்கில் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே அவகாசம் தரப்பட்டது. இதனால அரசு தரப்புக்கு வாய்மொழி வாதத்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியால் அரசு தரப்பு தனது வாதத்தால் சமரசம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது" என்றார் அவர்.
No comments
Post a Comment