Latest News

May 27, 2015

கடும் வெப்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு !
by Unknown - 0

கடுமையான வெப்பம் நிலவிவந்த, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் தற்போது வெயில் முன்பைவிட சற்றுக் குறைந்திருந்தாலும் 113 டிகிரியைத் தாண்டிய வெப்பநிலையே நீடிக்கிறது.

தற்போது இந்த இரண்டு மாநிலங்களிலும் பல இடங்களில் மழை மேகங்கள் தென்படுகின்றன. பருவமழைக்கு முந்தைய மழை, இந்த மாநிலங்களில் வெப்பத்தைத் தணிக்க சற்று உதவக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்திலும் ஒரிசாவிலும் இந்த வெப்பத்தின் காரணமாக குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஓரிசா, ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் வெப்பநிலை நிலவிவருகிறது. கடந்த வாரத்தில் இந்தப் பகுதிகள் சிலவற்றில் 122 டிகிரி அளவுக்கு வெப்பம் இருந்தது.

வெய்யிலில் நேரடியாக வேலைசெய்யக்கூடிய 50வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள்தான் இந்த வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெயில் காரணமாக ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலான மரணங்கள், ஆந்திர மாநிலத்தில்தான் நிகழ்ந்திருக்கின்றன. அங்கு மட்டும் 852 பேர் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் 266 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக வெயில் அடிக்கும்போது வெளியில் செல்ல வேண்டாமெனவும், அப்படிச் சென்றால், தொப்பி அணிந்து செல்லுமாறும் கையோடு குடிநீரை எடுத்துச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியத் தலைநகர் தில்லியிலும் வெப்பம் கடுமையாக இருந்துவருகிறது. திங்கட்கிழமையன்று அங்கு 113.9 டிகிரி வெப்பம் நிலவியது.

தமிழகத்திலும் கடும் வெப்பம்
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கிய சில நாட்களிலேயே வெப்ப சலனத்தின் காரணமாக பல இடங்களில் மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் பெரிய அளவில் தெரியவில்லை.

ஆனால், கடந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டிலும் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. கடந்த 23ஆம் தேதியிலிருந்தே தமிழகத்தில் 104 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் நிலவிவருகிறது.

கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் 107 டிகிரி அளவுக்கு சென்னை, வேலூர் ஆகிய இடங்களில் வெப்பம் நிலவியது.

இந்த வெப்ப நிலை உயர்வுக்கு, சமீபத்தில் பெய்த மழையோ, எல் - நினோ போன்ற உலகளாவிய வெப்பநிலை மாறுதல்களோ காரணில்லை என சென்னை வானிலைத் துறையின் துணை இயக்குனர் பாகுலேயன் தம்பி தெரிவித்தார்.

ஆந்திரா, தெலுங்கானா மாகாணங்களில் வெப்பத்தால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூறப்பட்டாலும், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மே மாத இறுதியில் கேரளாவில் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு, நாடு முழுவதும் பருவமழை படிப்படியாகப் பெய்யத் துவங்கும்.

இதற்கு முன்பு 2002 - 2003 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் வெப்பநிலை உயர்வால் உயிரிழந்தனர்.

2010ஆம் ஆண்டில், சுமார் 300 பேர் வரை வெப்பத்தால் உயிரிழந்தனர்.
« PREV
NEXT »

No comments