மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே கழுத்துப் பகுதியில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக நேற்றைய தினம் அவர் மயங்கி விழுந்ததனால் இன்று அவர் கடமைக்குச் செல்லாமல் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவரது வீட்டிற்கு வருகை தந்த இருவர் அவருடன் உரையாடிக் கொண்டிருந்த போதே அவரின் தலைப்பகுதியில் சிறிய ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
தலையில் காயமடைந்த மதிதயான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்போது களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அச்சத்தில் மக்கள்!
நீண்ட காலத்துக்கு பின்னர் இன்று காலை மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூகசேவை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் மீண்டுமொரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இக் காலகட்டத்தில் நடைபெற்றுள்ள இச் சூட்டுச் சம்பவமானது தமிழ் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
உண்மையில் சம்பவத்தின் சூத்திரதாரிகள் குறித்தும், சம்பவம் இடம்பெற்றதற்கான காரணங்கள் குறித்தும் உடனடியாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்க வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகும்.
குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை கைது செய்ய தவறும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் ஒரு துப்பாக்கி கலாசாரத்திற்குள் தள்ளப்படுவதுடன் கிழக்கு மாகாணத்தின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான அனைத்து செயற்பாடுகளும் அச்சம் காரணமாக முடங்கிவிடும் என்பதே யதார்த்தம்.
எனவே உண்மைகளை விரைவாக பாதுகாப்பு தரப்பினர் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவுள்ளது.
No comments
Post a Comment