Latest News

May 13, 2015

விடுதலைப் புலிகளுக்கு விளக்கேற்றினால் உடனே கைது செய்ய வேண்டும் - அநுர பிரியதர்ஷன யாப்பா
by Unknown - 0

தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவுகூருவதானது சட்டவிரோதமான செயலாகும். எனவும் அவ்வாறு யாரேனும் நிகழ்வுகளை நடத்தினால் படையினர் உடனடியாக அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது ஊடகவியலாளர் ஒருவர், "புலிகள் அமைப்பை நினைவு கூருவதற்கு இடமளிக்கக்கூடாது என உங்கள் கட்சியின் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வடக்கில் நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

உங்கள் கட்சியின் தலைவர்தான் பாதுகாப்பு அமைச்சர். எனவே, இது விடயத்தில் அவரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது?'' - என்று வினா தொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அநுர பிரியதர்ஷன யாப்பா, "புலிகள் அமைப்பானது தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாகும். அதை எவரும் நினைவுகூர முடியாது. எவரேனும் நினைவுகூரினால் அதற்கு எதிராகப் இராணுவத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது எம்.பிக்களைக் கைதுசெய்யும் விடயத்தில் தீவிரமாக செயற்படுவதுபோல் இது விடயத்திலும் செயற்பட வேண்டும். நீங்கள் கூறுவதுபோல் ஏதேனும் நிகழ்வு இடம்பெற்றிருந்தால் அதுபற்றி ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவோம்'' எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடக்கில் உள்ள தமிழர்களை புலிகளாக சித்தரிக்கும் சிந்தனையில் சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல சிங்கள ஊடகவியலாளர்களும் அவ்வாறே செயற்படுகின்றார்கள்.

இந்நிலையில் இந்த நாட்டில் இனங்களை தவறாக வழிநடத்துவதில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கினை வகிக்கின்றார்கள் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஏனெனில் வடக்கில் யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிலையில் இந் நிகழ்வினை ஊடகவிலாளர் ஒருவர் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாக கேட்டிருப்பது மேற்படி ஊடகவியலாளர்களும் இனத்துவேசம் கொண்டு செயற்படுகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டுகின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
« PREV
NEXT »

No comments