Latest News

May 13, 2015

அதிபர் இந்திரனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது! - வன்னி எம்.பி மற்றும் வடக்குமாகாணசபை உறுப்பினர்கள் இரங்கல்
by admin - 0


வவுனியா மாவட்டம் இன்று தன்னகத்தே இருந்த புகழ் பெற்ற அதிபர் ஒருவரை இழந்து சோகமயமாகக் காட்சியளிக்கின்றது. 1955.05.07 அன்று காரைநகரில் திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதியினருக்குப் புகழ்சேர்க்கும் மைந்தனாக வேலுப்பிள்ளை இந்திரனாக அவதரித்து அவர் பிறந்த மண்ணுக்கும் நாட்டுக்கும் சிறந்ததொரு கணித ஆசிரியராக வலம் வந்த நிலையில், சிறுவயது தொடக்கம் மரணிக்கும்வரை அன்புள்ளம் கொண்டவராகவும் தேவையுள்ளோர்க்குச் சேவைசெய்யும் மனப்பாங்கு கொண்டவராகவும் வாழ்ந்து வந்தவர்.

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய திரு.வேலுப்பிள்ளை இந்திரன் (இந்திரன் மாஸ்ரர்) அவர்களின் மறைவு குறித்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராஜா, எம்.தியாகராஜா மற்றும் எம்.பி.நடராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1979இல் தனது ஆசிரியர் பணியில் அடியெடுத்து வைத்தவர். ஹப்புத்தளை தலங்கம் முஸ்லிம் வித்தியாலயம், முல்லைத்தீவு விஸ்வமடு அ.த.க பாடசாலை, காரைநகர் கலாநிதி அ.தி.ம.ம. வித்தியாலயம் ஆகியவற்றில் கணித ஆசானாகவும் 1993 தொடக்கம் காரைநகர் கலாநிதி அ.தி.ம.ம. வித்தியாலயம், கரம்பன் சண்முகானந்தா வித்தியாலயம், கிளிநொச்சி சிவபுரம் அ.த.க. வித்தியாலயத்திலும் 1996 தொடக்கம் வவுனியாவில் பாரதி வித்தியாலயம், இராசேந்திரகுளம் அ.த.க. பாடசாலை, கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றிலும், 2011ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றிற்கு உயர்வுபெற்று வவுனியா விபுலானந்தா கல்லூரியிலும் கடமையாற்றி வந்துள்ளார்.

இவர் விபுலானந்தாவில் கடமையாற்றிவந்த காலத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் க.பொ.த.சா.த மற்றும் உயர்தர பரீட்சைகளிலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை ஈட்டுவதற்கு இரவு, பகல் பாராமல் குடும்ப நலனிலும் தனது உடல் நலனிலும் அக்கறை செலுத்தாமல் சேவையாற்றினார்.

உடல்நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாகத் தொடர்ந்தும் பணியாற்ற முடியமையினால், 2014.09.10 தொடக்கம் வவுனியா தெற்கு கல்வி வலயத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

இவரது ஆசிரியர், அதிபர் சேவை காலங்களில் இவர் கடமையாற்றிய பாடசாலைகள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. இந்த சாதனைகளால் அவரது பெயரும் புகழும் என்றும் நீடித்துக்கொண்டிருக்கும். 

இவர் அரசபணி தவிர்ந்து ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளராகவும், தேசிய பற்றாளராகவும் இருந்தார். அண்மையில் வடமாகாணசபை உறுப்பினராக புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட எம்.பி.நடராஜ் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியினை ஒழுங்கமைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததைஎண்ணிப்பார்க்கும்போது அவரது பற்றுறுதி மிளிர்கிறது. 

அன்னாரின் இழப்பு, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கும் மற்றும் கல்விச் சமூகத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை எமது இதய அஞ்சலிகளையும் சமர்ப்பணம் செய்கின்றோம்.


விவசாயி இணையமும் தனது பாடசாலை முன்னாள் அதிபருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கிறது
« PREV
NEXT »

No comments