வடமாகாண சபை விவகாரங்கள் தொடர் பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுடன் கடந்த திங்கட்கிழமை ஆலோசனை நடத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மாநாடு ஒன்றை ஜூன் மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடத்துவது குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றம் ஜூன் மாதம் இரண்டாம் வாரமளவில் கலைக்கப்பட்டு ஆகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்காக கட்சியை தயார்படுத்த வேண்டிய தேவை மாவட்ட தலைவர்களுக்கே உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த கலந்துரையாடலின் முடிவில் சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனை அழைத்து பேசிய ஜனாதிபதி வடமாகாண சபையின் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாடியுள்ளார்.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டை ஜூன் மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடத்துவது குறித்தும் அங்கஜனுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய அளவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Post a Comment