Latest News

May 28, 2015

ஈபிடிபியினர் அபகரித்துள்ள எனது வீட்டை கேட்டால் துப்பாக்கியால் மிரட்டுகின்றனர்!
by Unknown - 0

யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள தனது வீட்டில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரின் அலுவலகம் அமைத்துள்ளதாகவும் அந்த வீட்டை மீளத்தருமாறு கேட்டால் துப்பாக்கி கொண்டு தன்னை அவர்கள் மிரட்டுவதாகவும் காணிக்குச் சொந்தக்காரான முதியர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது காணி ஒன்பது வருடங்களாக ஈபிடியால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது வீட்டை மீள வழங்குமாறு முன்னாள் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிடம் கோரியபோதும் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை என்று கூறிய காணி உரிமையாளர் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் கடிதம் எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுத முனையில் தனது வீடு பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் முதியவர் இதனால் தனது மகளின் திருமணத்தைகூட நடத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தனக்கு இப்போது 78 வயதெனவும் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தான் பொலிசிடம் நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் முறைப்பாடு செய்ததுடன் பத்துக்கு மேற்பட்ட தடவைகள் வாக்குமூலங்கள் அளித்தாகவும் கூறிய அவர் அரசியல் சூழலால் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என அன்று பொலிஸார் தெரிவித்தாவும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சரவணபவனுடன் பேசியபோது அவர் தனது பெயருக்கு வீட்டை எழுதி வைத்தால் வழக்குப் போட்டு மீட்க முடியும் என தெரிவித்தாகவும் குற்றம் சுமத்தி உள்ளார்.

இராணுவத்திடம் உள்ள வீடுகளை விடுவிப்பவர்கள் ஈபிடியிடம் உள்ள வீடுகளை விடுவிக்க ஏன் தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பும் அந்த முதியவர் நல்லாட்சியும் ஜனநாயகமும் உண்மையில் நிலவினால் எனது வீட்டை மீட்டுத் தாருங்கள் என்றும் கோரினார். 
« PREV
NEXT »

No comments