Latest News

April 30, 2015

மீண்டும் சண்டை வலுக்கிறது; ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படைகள் குண்டுகள் வீச்சு
by admin - 0



ஏமன் நாட்டில் மீண்டும் சண்டை வலுக்கிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் குண்டுகளை வீசிஉள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர்.

இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26–ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வந்தன.
944 பேர் உயிரிழப்பு இந்த தாக்குதல்களில் 950-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 3,487 பேர் படுகாயம் அடைந்தனர். 1½ லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். இந்த தாக்குதல்களினால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சவுதி அரேபியாவிடம் அதிபர் மன்சூர் ஹாதி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் 4 வாரங்களாக நடைபெற்று வந்த தாக்குதல்கள் கடந்த 21-ம் தேதி முடிவுக்கு வந்தது. ‘‘ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் ஏமன் முழுவதும் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு நேற்று ஏடன் நகரில் அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் அதிபர் ஆதரவு படையினர், 3 பேர் பொதுமக்கள். இந்த தகவலை ஏடன் சுகாதாரத்துறை தலைவர் உறுதி செய்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, மேலும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்கள் தரப்பு சேதம் குறித்து எந்தவொரு தகவலையும் அவர் வெளியிடவில்லை. நேற்று இரவில் லாஜ், அப்யான் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்கள் நடத்தின.

மேலும், தெற்கு ஏடனில் கோர் மஸ்கார், தார் சாத் மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து இழந்த நிலைகளை மீட்கும் வகையில், சவுதி கூட்டுப்படைகள் நேற்று கிளர்ச்சியாளர்களை குறி வைத்து போர் விமானங்களில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதல்களின் சேதவிவரம் உடனடியாக தெரிய வரவில்லை. ஏமனில் மீண்டும் சண்டை வலுத்து வருவது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
« PREV
NEXT »

No comments