பாண்டியன்குளம், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் பாலிநகர் கடைத் தொகுதிகள் திறப்பு விழா புதன்கிழமை (29) நடைபெற்ற போது, அந்த நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு கடைத்தொகுதிகளை திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
'முன்னர் மத்திக்கே எல்லாம் சொந்தம் நீங்கள் வெறும் கைப்பொம்மைகள் தான் என்று வெளிப்படையாகக் கூறினார்கள். இப்பொழுது நாங்கள் சேர்ந்தே செய்வோம், வாருங்கள் என்று கூறிவிட்டு கடிவாளத்தைச் சட்டப்படி தம்வசமே வைத்திருக்கின்றனர்.
இதுவே தற்போது ஏற்பட்டுள்ள சிறுமாற்றம். அரசியல் தீர்வொன்று வெகுவிரைவில் கொண்டு வரப்பட வேண்டும். எமக்கான அதிகாரங்கள் திடமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பொதுத்தேர்தல் ஒன்று வர இருப்பதால் இப்போதைக்கு எதையுமே உருப்படியாக எதிர்பார்க்க முடியாதுள்ளது.
வடமாகாண மக்கள் பலரைப் பல இடங்களிலும் சென்று, கண்டு, சந்தித்து வந்துள்ளேன்.
அவ்வாறான சந்திப்புக்களில் முக்கியமாக அவர்களால் உள்ளகக் கட்டுமானங்களின் அவசிய திருத்தங்கள், புனர்நிர்மாணங்கள் ஆகியன பற்றி வலியுறுத்தப்பட்டன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் தடைப்பட்டுள்ளமை பற்றி அறிவிக்கப்பட்டன.
நீரில்லை. நிலமில்லை. நின்று வாழ வீடில்லை என்று மக்கள் கூறினார்கள். வேலையில்லா திண்டாட்டம் எமது இளைஞர்களையும் ஏன் மத்திய வயது மக்களையும் வெகுவாக பாதித்துள்ளமை பற்றி எடுத்தியம்பினார்கள். முன்னர் போரில் ஈடுபட்ட குடும்பத்தவரின் பாடு மிகமோசமாக அமைந்திருப்பதை அவதானித்தேன்.
ஒருவர் சிறையில் பல வருடங்கள் இருந்து விட்டு புனர்வாழ்வு என்ற அடிப்படையில் மேலும் சில வருடங்கள் எங்கெல்லாமோ காலம் கழித்துவிட்டு சொந்த வீடு வந்து சேர்ந்தார். மனைவி, இரண்டு மூன்று பிள்ளைகள், அவரின் வயது போன தாய் தந்தையர் என்று அவரின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் எந்தவித வருமானமும் இன்றி கடன்பட்டுத் தவிப்பதைப் பார்த்தார். என்னிடம் வந்துமன்றாட்டமாகக் கேட்டார்.
'ஐயா! உங்கள் வீட்டுக்கு முன்னிருக்கும் வீதியைக் கூட்டுவதற்கு கூட ஆயத்தமாய் இருக்கின்றேன். தயவு செய்து வேலையொன்று பெற்றுத் தாருங்கள்' என்று. நான் எங்கே போவேன் வேலை எடுத்துக் கொடுப்பதற்கு? அப்படியிருந்தும் அவர் பெயர் அடங்கலாகப் பலரின் பெயர்களைநாங்கள் எங்கள் இடாப்புக்களில் உள்ளடக்கி வேலை வாய்ப்புகள் கிடைத்த போது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமையுடன் வேலைகளைப் பெற்றுத் தந்து வருகின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் எமது வளங்களை, எமக்கிருக்கும் அனுசரணைகளை, எமது மக்களின் வாக்காளர் தொகையினை எமது வடமாகாணம் சம்பந்தமாகப் பொதுவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. பல வெளிநாட்டுத் தாபனங்கள், நிறுவனங்கள், நம்பிக்கை பொறுப்பு நிதியங்கள் எமக்கு பண உதவி இப்பொழுது கூட பெருவாரியாகத் தந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எவருக்கும் இவை பற்றித் தெரிவதில்லை.
கனடாவில் இருந்து வந்த ஒருவர் நேற்றுக் கூறினார் சுமார் 5 இலட்சம் டொலர்கள் வன்னியில் ஒவ்வொரு வருடமும் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தம்மால் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்று. இவை பற்றி எங்களுக்கு தெரிவதில்லை. இந்நிலை மாற வேண்டும். தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பணம் அனுப்புவது பற்றியும் அவர்கள் என்னென்ன நன்மைகளை எங்கள் மக்களுக்கு செய்கின்றார்கள் என்பது பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிந்து கொள்வதால் ஒரே செயற்திட்டத்தை இருவேறு நிறுவனத்தினர் ஒரே இடத்தில் செய்ய விளைவதை தடுக்கலாம். அத்துடன் நடைபெறும் நன்மைகள் பற்றிய ஒரு கண்காணிப்பை நாங்கள் உண்டு பண்ணலாம். இவற்றில் வெளிப்படைத்தன்மை இருப்பது மிகவும் முக்கியம்.
இன்று எமது வடமாகாணத் தேவைகளைச் சரியாகவும் முறையாகவும் கணித்து வெளியிட வேண்டிய ஒரு கடப்பாடு எமக்குள்ளது. ஆனால் அவ்வாறு கணிக்கக்கூடிய வசதிகள் எமக்கில்லை. எனவேதான் நாங்கள் பலரிடம் இருந்தும் இதற்கான உதவிகளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திடமும் இது சம்பந்தமாகப் பேசி வருகின்றோம். அதைவிட ஒவ்வொரு கிராமஅலுவலர் பிரிவிலும் இருந்து தரவுகளைப் பெற்று வருகின்றோம். பலவிதமான புனர்நடவடிக்கைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. தேவைகளும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. விரைவில் பலவிதங்களிலும் எமது வடமாகாணம் உரிய மறுமலர்ச்சியைப் பெறும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
நாம் வெளிப்படைத்தன்மையை விரும்புவது போலத்தான் சட்டத்துக்கு அமைவாக உரிய செயல்முறைகளைப் பின்பற்ற உறுதி எடுத்துள்ளோம். பிழையான செயல்முறைகளில் கரவாக எமது அலுவலர்கள் ஈடுபட்டால் எமக்குத் தெரியப்படுத்துங்கள்;. உரிய நடவடிக்கைகள் எடுப்போம். மக்கள் சேவை என்று வந்துவிட்டால் மக்களுக்காகவே நாங்கள் வாழத்தலைப்பட வேண்டும்.
உற்றார், உறவினர், உடன் இருப்பவர்களுக்கென்று எமது உத்தியோகபூர்வ அதிகாரங்களைப் பாவித்து சுயநன்மைகளைப் பெற விளையக் கூடாது. முன்னைய ஜனாதிபதி ஒருவரின் சகோதரருக்கு இப்பொழுது நடந்திருக்கும் கதி என்ன என்று எமக்குத் தெரியும். எனவே தான் மக்கள் சேவை என்று மன்றுக்கு வருபவர்கள் சுயநலத்தை மறந்துவிட வேண்டும். நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்வுகளில் தகுதிக்கே முதலிடம் வழங்க வேண்டும். தமது சொந்த நன்மைகளும் ஊரார் நன்மைகளும் முரண்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுமேயானால் சுயஇலாபத்தையும் நன்மையையும் புறக்கணிக்கும் மனோபக்குவம் எமக்கு வர வேண்டும்' என்றார்.
No comments
Post a Comment