மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுத் தேர்தலுக்குப் புதிய அரசு செல்லுமாயின் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் வாக்குறுதிகளை தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
புதிய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். அரசு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அவசர அவசரமாக பொதுத் தேர்தலுக்குச் செல்ல முயற்சித்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், 19 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல், புதிய தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்தல் ஆகியவை அரசு தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளாகும். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
நாட்டு மக்களும், புதிய அரசை ஆட்சியில் அமர்த்த முயற்சித்த தரப்புக்களும் அவசர தேர்தல் ஒன்றைக் கோரவில்லை. நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்த போதியளவு கால அவகாசம் இருக்கின்ற நிலையில், அவசர அவசரமாக 100 நாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்றாது தேர்தலை நடத்துவதற்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
Social Buttons