Latest News

April 17, 2015

எல்லை மீறினால் சுடுவோம்: ரணில் நகைச்சுவையாகவே கூறினார்- சந்திரிகா
by Unknown - 0


இலங்கை கடல் எல்லையை மீறி நுழைபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத் தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியமையானது நகைச்சுவையாகக் கூறிய விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே சந்திரிகா இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் நகைச்சுவையாகக் கூறியதை மக்கள் பிழையாக விளங்கிக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அவரிடம் கேள்வியெழுப்பியதும், தனது வீட்டுக்குள் சட்டவிரோதமாக ஒருவர் நுழைந்தால் அதனைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உரிமை உண்டு என நகைச்சுவையாகக் கூறியிருந்தார். இது பிழையாக விளங்கிக்கொள்ளப் பட்டுள்ளது என்றும் சந்திரிகா குமாரதுங்க தனது செவ்வியில் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமான முறைகளைக் கையாண்டு இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இது எமது கடல் வளத்தையும் மீனவர்களின் எதிர்காலத்தையும் பாழடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பலமான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் சந்திரிகா குமாரதுங்க, இந்திரா காந்தியைத் தொடர்ந்து ஆட்சிக்குவந்த சகலரும் இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் கடந்த அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்ததுடன், ஊடக அடக்குமுறைகளைக் கையாண்டமையால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்ததுடன், ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தன. எனினும் புதிய அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதுடன், சர்வதேசமும் நம்பிக்கைவைத்து இலங்கைக்கு எதிரான அறிக்கை வெளியிடப்படுவதை ஆறு மாதங்கள் பிற்போட்டிருப்பதாகவும் கூறினார்.
« PREV
NEXT »

No comments