Latest News

April 17, 2015

அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தடை!
by Unknown - 0


திறைசேரிமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தடைவிதித்துள்ளது.

ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அர்ஜுன மகேந்திரனுக்குப் பயணத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.

30 வருட காலஅவகாசம் கொண்ட திறைசேரிமுறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்த விசாரணைகள் முடியும்வரை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் குறித்த தடையை நீக்கும்வரை மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டைவிட்டு வெளியேற முடியாது.

அர்ஜுன மகேந்திரன் வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருக்கும் நபராக இருந்தாலும் நாட்டைவிட்டு அவர் வெளியேறுவதைத் தடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ரணசிங்க கூறினார். திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் பல மணி நேரங்கள் ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரன் கடந்த ஜனவரி 26ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஒரு பில்லியன் ரூபா திறைசேரிமுறி விநியோகத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், இதில் அர்ஜுன மகேந்திரனின் மருமகனுடன் தொடர்புபட்ட நிறுவனத்துக்கு அதிகளவான முறிகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மத்திய வங்கி ஆநனர் பதவியிலிருந்து அர்ஜுன மகேந்திரன் விலகவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் விசாரிப்பதற்கு மூவர் அடங்கிய குழுவொன்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நியமித்திருந்தார்.

இதுகுறித்த விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், அர்ஜுன மகேந்திரன் ஊழல் மோசடிக்கு எதிரான விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது இவருடைய வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடைவிதிக்கப் பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments