Latest News

April 17, 2015

பேரணியில் பாகிஸ்தான் கொடி-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் கைது!
by Unknown - 0



காஷ்மீரப் பிரிவினைவாதத் தலைவர் மசரத் அலாம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு மாதமேயான நிலையில், அவரை கைது செய்துள்ளதாக இந்திய ஆளுகையின் கீழுள்ள காஷ்மீர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய பகுதியில் இடம்பெற்ற பேரணியின் போது, அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடியை வைத்துக்கொண்டு வருவதற்கு ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கொடியை தாம் பறக்க விடவில்லை என கூறிய அலாம், ஆனால் அவை மற்றவர்களால் வைக்கப்படிருந்ததாகவும் கூறினார்.

இந்த வாரத்தின் முற்பகுதியில், பாதுகாப்பு படையினரால் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்து பிரிவினைவாத அனைத்துக்கட்சி ஹூரியத் மாநாடு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில் இந்த கைதும் இடம்பெற்றுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசரத் ஆலம், ஒரு மாத காலத்திற்கு முன்பு தான் விடுவிக்கப்பட்டிருந்தார்.

காஷ்மீரில் கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் நடத்திய வன்மையான எதிர்ப்பு போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இதனால் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசரத் ஆலம் தற்போது மீண்டும் கைதாகியுள்ளார்.

காஷ்மீரின் ஹுரியத் பிரிவினைவாத கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் மசரத் ஆலம், பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பவும், பாகிஸ்தான் நாட்டு கோடியை கையிலேந்தி பறக்கவிடவும், அவரது ஆதரவாளர்களை தூண்டிய குற்றத்திற்காக தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல்துறை உறுதி செய்துள்ளது.

இதே சமயம் கைதாகியுள்ள மசரத் ஆலம், இது குறித்து இந்திய தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய போது, 'கைது என்பது எங்களுக்கு புதியது கிடையாது, இது முதல் முறையாக நடைபெறும் சம்பவமும் கிடையாது, ஆகையால் இது போன்ற நடவடிக்கைகளால் நாங்கள் பின்வாங்க போவதில்லை' என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள சூழலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாலும், இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமாதான பேச்சு வார்த்தைகளை புதிய கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினை வாத இயக்கங்களின் தலைவர்களை விடுவிக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் முப்தி முஹம்மது சையத் கூறியுள்ளார். அதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முஹம்மது சையத் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் கைதாகியுள்ள மசரத் ஆலம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டு கொடிகளை பறக்கவிட செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments