ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பூர் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவர் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் உறுதியளித்து அதனை கிழக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும், சம்பூர் மக்களும் நம்பினர்.
அதற்காக பிரதமரும், அமைச்சரும், ஆளுநரும் சம்பூருக்குச் சென்று மக்களுடனும் அரசியல் பிரமுகர்களுடனும் கலந்துரையாடி உறுதிமொழிகளும் வழங்கினர்.
ஆனால் 30ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றம் நடைபெறமாட்டாது என்பது உறுதியாகிவிட்ட நிலையில். மீள் குடியேற்றம் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதற்குச் சான்றாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு சட்டரீதியிலான விடுவிப்பு இன்னும் வழங்கப்படவில்லை. அது மூடுமந்திரமாகவே உள்ளது.
சம்பூர் மக்கள் செறிவாக வாழ்ந்த குடிமனைப் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாம் அகற்றப்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. (அரசடிப்பிள்ளையார் ஆலயம் முதல் ஐந்தாம் கட்டைவரை)
இன்னும் எத்தனை முதலீட்டுச் சபைகளுக்கு சம்பூரை விற்கலாம் என்ற மறைமுகப்பேச்சுக்கள் நடைபெறுவதாக அறியப்படுகின்றது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சம்பூர் மக்களுக்கு மீள்குடியேற்றமும் இல்லை. விமோசனமும் இல்லை. என்பது தெரிகின்றது.
மீள்குடியேற்றம் நடைபெறவேண்டுமென்று போராட்டங்ளை முன்னெடுக்க முனைந்த மக்களை, மீள்குடியேற்றம் நடைபெறும். போராட்டம் நடத்தாதீர்கள் என தடுத்தவர்களும் மௌனமாக உள்ளனர்.
அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் மக்களைப் பணயம் வைக்கும் ஒருசிலரின் முகமூடிகளைக் கிழித்தெறிய ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் திரளவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் சம்பூர் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து கூக்குரலிட்ட சிலர் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியால் மௌனமாகிப் போனதாகத் தெரிகின்றது.
ஊருக்குப் போவதை முதன்மைப் படுத்தி எவர் அதற்குத் துணையாக நிற்கின்றாரோ அவரையே மக்கள் சேவகனாக பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அதனைச் சம்பூர் மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்த நிலையில் 30ஆம் திகதி மீள்குடியேற்றம் நடைபெறவில்லை என்றால், மக்களை அணிதிரட்டி சம்பூருக்குள் நுழைவதற்கு யார் முன்நிற்கின்றாரோ அவரே எமது பிரதிநிதி என்பதனை மக்கள் நிச்சயமாக நிரூபித்துக் காட்டுவர்.
No comments
Post a Comment