""எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை''
தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் முடியும் வரையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நான் செயற்படவே விரும்புகின்றேன். எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பினை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை
என நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
நூறு நாட்கள் முடிவடைந்த பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தனி அரசாங்கம் அமைந்தவுடன் மீண்டும் அமைச்சராவேன் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் வரையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
இப்போது இருக்கும் அரசாங்கம் நிரந்தரமானதல்ல. அதே போல் நாம் எதிர்க்கட்சியாக இருக்கின்றமையும் தொடரப் போவதில்லை. நூறு நாட்கள் என்ற வட்டத்தினுள் வாழும் அரசாங்கம் நூறு நாட்களில் தமது வேலைத்திட்டங்களை முடித்தவுடன் மீண்டும் பாராளுமன்றம் கலைக்கப்படும். அதன் பின்னரான பொதுத் தேர்தலுடன் மீண்டும் நாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலமான அரசாங்கம் அமையும். அது வரையில் இப்போது இருக்கும் தேசிய அரசில் நாம் பங்குதாரர்களாக இருக்க விரும்பவில்லை. நாம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல விடயங்களை ஆதரிக்கின்றோம்.
இந்த நாட்டில் மக்களின் ஆதரவுடன் தனிக் கட்சி அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. அதனை அடுத்த பாராளுமன்றத்தில் செயற்படுத்த வேண்டும். தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது. எனவே ஏப்ரல் 23 ஆம் திகதியுடன் பாராளுமன்றம் கலைத்தாக வேண்டும். அதுவரையில் புதிதாக ஒரு எதிர்க்கட்சி அமைவது அவசியமற்றது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு சற்று கூடிய காலப்பகுதி மட்டுமே இருக்கின்றது. அதற்குள் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக நாம் செயற்படலாம். பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் எம்மிடம் உள்ளது.
எனவே எதிர்க்கட்சி பதவிக்கு நாம் பொருத்தமானவர்களே. எனவே நூறு நாட்கள் முடியும் வரையில் நான் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படவே விரும்புகின்றேன்.
No comments
Post a Comment