Latest News

April 03, 2015

ஜவுளி கடை உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: கண்டறிந்து புகார் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
by admin - 0

கோவாவில் உள்ள பிரபல துணிக் கடையில் உடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டறிந்து மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்துள்ளார். 

மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கோவாவில் உள்ள பிரபல துணிக் கடைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த கடையில் வாங்கிய துணிகளை உடை மாற்றும் அறையில் சரிபார்க்க சென்றபோது, அந்த அறையில் ரகசிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அவரது உதவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து ஸ்மிருதி இரானி தரப்பிலிருந்து கோவா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி நிலேஷ் ரானே கூறும்போது, "பானாஜியின் மேற்கே உள்ள கெலாங்குத்தில் உள்ள பிரபல துணிக் கடையில் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது உதவியாளர்கள் சென்றிருந்தபோது இது குறித்து அவர்கள் சந்தேகம் எழுப்பி புகார் அளித்தனர். 

உடனடியாக நாங்கள் அங்கு சென்று சோதனை நடத்தினோம். அந்த கேமரா அறையின் உட்பகுதியை நோக்கி தான் இருந்தது. தொடர்ந்து கடையின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளை நாங்கள் சோதித்து பார்த்தோம். அதில் 3 முதல் 4 மாதங்களுக்கான தரவுகள் எங்களிடம் சிக்கின. அவை அனைத்திலும் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் இடம்பெறுபவையாக உள்ளன" என்றார். 

இந்தச் சம்பவம் குறித்து ஸ்மிருதி இரானி தரப்பு கருத்து தெரிவிக்காத நிலையில், பாஜக இதனை தீவிரமாக விசாரிக்க கோரியுள்ளது. 

சுற்றுலாவுக்கு பெயர்போன கோவாவில், ரகசிய கேமரா விவகாரங்கள் வழக்கமான ஒன்றாக இருப்பதாக காங்கிரஸ் கவலைத் தெரிவித்துள்ளது. "இந்த கடை மட்டுமல்ல, கோவாவில் உள்ள பல துணிக் கடைகளில் இவை நடக்கின்றன. அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மத்திய அமைச்சரால் இவை கண்டறியப்பட்டு புகார் அளிக்க முடிந்துள்ளது. சாதாரண பெண்களால் இவை சாத்தியமில்லை" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் துர்காதாஸ் காமத் கூறினார்.

« PREV
NEXT »

No comments