Latest News

April 14, 2015

இன்னும் ஏன் மர்மம்?
by admin - 0

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னவானார்? அவர் விமான விபத்தில்தான் கொல்லப்பட்டாரா,  இல்லை தப்பிச் சென்று அன்றைய சோவியத் யூனியனில் தஞ்சமடைந்தாரா? அன்றைய ஸ்டாலின் அரசு அவரைச் சுட்டுக் கொன்றதா, இல்லை சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கேயே மரணமடைந்தாரா? அவர் விமான விபத்திலிருந்து தப்பி, ஒரு துறவியாகி நாடோடியாக இந்தியாவிலேயே அலைந்து திரிந்து கொண்டிருந்தாரா? - இந்திய சரித்திரத்தில் இமயம் போன்ற ஆளுமையாகத் திகழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான மர்மம் இன்றுவரை நீடிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஜெர்மானிய பயணத்தின்போது நேதாஜியின் உறவினர்களை அங்கே சந்திக்க இருக்கும் வேளையில், நேதாஜியின் சகோதரர் உள்ளிட்ட உறவினர்களை அன்றைய இந்திய அரசு உளவு பார்த்து வந்ததாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இந்தத் தகவல்கள் அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், இவை வெறும் ஊகங்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
நேதாஜி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான எந்தவொரு செய்தியும், ஆகஸ்ட் 18, 1945-ஆம் ஆண்டு ஃபார்மோசா (இன்றைய தைவான்) தீவில் விமானம் விபத்துக்கு உள்ளாகி அவர் மரணமடைந்தார் என்று சொல்லப்பட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகும்

இந்தியாவைப் புரட்டிப் போடுகிறது என்றால் அந்த மாவீரனின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை நாம் உணர முடிகிறது. "ஜெய் ஹிந்த்' என்கிற கோஷமும், அண்ணல் காந்தியடிகளுக்கு "தேசப் பிதா' என்கிற பட்டத்தையும் அளித்தவர் சுபாஷ் சந்திர போஸ் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சுபாஷ் சந்திர போஸூக்கும் அண்ணல் காந்தி அடிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதும், அண்ணலின் ஆதரவு பெற்ற வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் 1939-இல் நேதாஜியால் தோற்கடிக்க முடிந்தது என்பதும் உலகறிந்த உண்மை. இந்தியா சுதந்திரம் பெற்றபோது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்திருந்தால், மக்கள் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, "நேதாஜி திரும்பி வந்துவிட்டால்?' என்கிற பயம் நேருவின் தலைமையிலான காங்கிரஸூக்கு இருந்து வந்தது என்பதை பசும்பொன் தேவர் மட்டுமல்ல, பல வங்காளத் தலைவர்களும் தொடர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நேதாஜியின் மரணம் தொடர்பான மறு விசாரணை தேவை என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

நேதாஜியின் உறவினர்கள் வேவு பார்க்கப்பட்டனர் என்கிற வதந்தி தொடர்பாக, சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் சைலேஷ் சந்திர போஸின் மகன் அர்தேந்து போஸ் வெளியிட்டிருக்கும் கருத்து அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தங்களது குடும்பத்தினர் மத்தியில் வேவு பார்க்கப்படுகிறோம் என்கிற அச்சம் தொடர்ந்து இருந்து வந்ததாகக் கூறும் அவர், அரசு தரப்பில் நேதாஜி பற்றிய இனம்புரியாத அச்சம் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளர்கள், விமான விபத்தில் தப்பித்த நேதாஜி சோவியத் யூனியனில் தஞ்சமடைந்ததாகவும், 1957-58 வரை அங்கே உயிருடன் இருந்ததாகவும் கருதுகிறார்கள். ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியுடன் பிரிட்டிஷாரைத் தனது இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் எதிர்க்கத் துணிந்த நேதாஜி உயிருடன் இருப்பதை பிரிட்டீஷார் விரும்பாததால், ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் அமைந்த இந்திய அரசின் ஒப்புதலுடன் ஸ்டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் யூனியன் அரசு, நேதாஜியைச் சுட்டுக் கொல்லவோ, சைபீரியாவுக்கு நாடு கடத்தவோ செய்திருக்கக்கூடும் என்பது பரவலான வதந்தி.

நேதாஜி, இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியையும், ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரையும் சந்தித்தார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உண்மை. அதனால், தங்களது எதிரிகளின் நண்பன் என்கிற காரணத்தால் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் அரசு அவருக்கு எதிராக செயல்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், ஃபார்மோசா தீவில் நடந்த விமான விபத்தும், அதற்குப் பிறகு வெளிவந்த செய்திகளும் அவர் மரணமடைந்ததை உறுதிப்படுத்துகின்றன. அப்படியே உயிர் பிழைத்திருந்தாலும், அவரால் சோவியத் யூனியனுக்கு எப்படி போக முடிந்தது என்பது புதிராக இருக்கிறது.

சுபாஷ் சந்திர போஸ் இறந்து, அல்லது, மாயமாக மறைந்து, 70 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது மரணம் மர்மமாகத் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? சுதந்திர இந்திய அரசால் ஆதாரபூர்வமான தகவல்களை வெளிப்படுத்தி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதது ஏன்?

நேதாஜி குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள நேதாஜி தொடர்பான எல்லா ஆவணங்

களையும், கடிதப் பரிமாற்றங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படி எழுப்பும் கோரிக்கையை ஏன் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது? அந்த விவரங்கள் வெளிவந்தால் இந்திய, ரஷிய உறவு பாதிக்கப்படும் என்கிற அச்சமா? இல்லை, சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளர்கள் கூறுவதுபோல, நேதாஜி விமான விபத்தில் தப்பினாரா?

நேதாஜியின் உறவினர்களை பண்டித நேரு அரசும், அவருக்குப் பின்னால் அமைந்த சாஸ்திரி, இந்திரா அரசுகளும் வேவு பார்த்தனவா என்பதல்ல கேள்வி. நேதாஜி தொடர்பான ஆவணங்களை ஏன் இன்னமும் ரகசியமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் நரேந்திர மோடி மக்களுக்குத் தர வேண்டிய விளக்கம்.
« PREV
NEXT »

No comments