Latest News

April 14, 2015

இலங்கை இராணுவம் வெளியேறும் படைத்தளங்கள் சிலவற்றின் சித்திரவதைக் கூடங்களும் மர்மங்களும்
by admin - 0

இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றில் காணப்படும் சித்திரவதைக கூடங்கள் கடந்த காலங்களில் இருந்து வந்த சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உளதாக தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதைக கூடங்கள்


குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மட்டும் படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவல்கள் இல்லை...


குறிப்பாக மஹிந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்த போதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் மர்மமாகவே உள்ளது.


காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டிருந்ததை மூத்த படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.


முதலில் அவர்கள் அவ்வப்பகுதியில் செயற்பட்ட புலனாய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களது வழிநடத்தலில் கடத்தப்பட்டனர். இரவிரவாக அப்போது புகழ்பெற்றிருந்த இறைச்சிக்கடை எனப்படும் அச்செழு முகாமிற்கு கொண்டுவரப்பட்டார்கள். பின்னர் வடிகட்டப்பட்டு புன்னாலைக்கட்டுவன் பகுதியினூடாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டனரென அவர் அதனை இப்போது நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார். குறித்த அச்செழு சித்திரவதைக்கூடம் மூடப்பட்டு இப்போது அது வசாவிளானில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


அங்கிருந்த நாட்கள் நரக வேதனையானவை. நான் 21 நாட்கள் இருந்தேன். வீடு திரும்பியது கடவுள் தந்த பரிசுதான். இப்போதும் இரவினில் கனவுகள் கண்டு விழித்தெழுவேன் என்கின்றார் அந்த இருண்ட நாட்களை நினைவு கூரும் 31 வயதான கணனி வல்லுநரான இளைஞரொருவர். விடுதலைப்புலிகளிற்கு கணனி கற்பித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


இரவிரவாக அலறல்கள் கேட்கும். அவை பெரும்பாலும் மனிதம் செத்துவிடும் கடைசி நிமிடக் கதறல்களாக இருக்கும். பெண்போராளிகள் என சிலரை அப்போது கொண்டுவந்திருந்தார்கள். சித்திரவதைகளின் ஓலங்கள் இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள முடியாதிருக்கின்றது. அந்த ஒலங்கள் படிப்படியாக குறைந்தே போனது. அதனால் அவர்கள் உயிரிழந்திருக்கலாமென நம்புகின்றேன். அவ்வாறு பலர் கொல்லப்பட்டனர். ஆனால் சடலங்களிற்கு என்ன நடந்ததென்பது தெரியாதெனகிறார் அவர்.2007ம் ஆண்டின் இறுதியில் அவர் கைதாகி மிக அதிசயமானதொரு நிகழ்வில் விடுவிக்கப்பட்டிருந்தார்.


உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளும் அவர்கள் சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். எமது அலுவலகம் அதனை அண்டிய பகுதியில் இருந்தது. இரவிரவாக அலறல்கள் கேட்கும். பின்னர் அவை ஓய்ந்து போய்விடும். அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்களென நாம் பேசிக்கொள்வோம். அனைத்தும் அனைவரிற்கும் தெரிந்தே நடந்தது. பகல் இரவென வேறுபாடின்றி அதிகாரிகள் வாகனங்களில் அங்கு வந்து செல்வார்கள். என்னுடைய அனுமானத்தின் படி கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே நம்புகின்றேன்.


எனது சகபாடிகள் அடுத்த நாள்களிலும் இரவுகளிலும் தனித்து அங்கு பணியாற்ற அச்சங் கொண்டிருந்தனரென நினைவு கூருகின்றார் மற்றொரு பெரும்பான்மையின சிவில் சேவை அதிகாரி. பகலில் பலவீனமான நிலையில் வெளியாட்களான இளைஞர்கள் சிலர் விலங்கிடப்பட்ட நிலையினில் நடமாடுவதை காண்பேன். ஆனாலும் அடுத்துவரும் நாட்களில் அவர்கள் பற்றி தகவல்கள் கிடைப்பதோ அவர்களை காண்பதோ முடியாதிருக்கு மெனவும் அவர் கூறுகின்றார்.


தெற்கிலிருந்து தருவிக்கப்பட்ட அவர் அங்கு பணியாற்ற வேண்டியிருந்தது. தற்போது கொழும்பு திரும்பிவிட்ட போதும் இப்போதும் அந்த ஓலங்களும் விலங்கிடப்பட்ட நிலையில் நடமாடிய அவர்கள் தன்னை கெஞ்சுவது போல பார்த்த கண்களும் தன்னை துரத்துவதாக அவர் கூறுகின்றார்.


உண்மையில் துணை ஆயுதக்குழுக்கள் ஆட்கடத்தல்களிற்கு உதவின. யாழ்ப்பாணத்தில் அகப்பட்டு போன புலிகள் சிலர் கூட சகபாடிகளை காட்டித்தந்தனர். பிடிபட்ட அனைவரிற்கும் வெறும் பச்சைநிற காற்சட்டைகள் மட்டும் வழங்கப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களிலிருந்த மக்கள் வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுள் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பின்னரே கொல்லப்பட்டதாக  அவர் மேலும் கூறினார்.


அவர்களது உடலங்கள் தடையமேதுமின்றி எரியூட்டப்பட்டது. அதற்கென விசேட இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனாலும் சந்திரிகா ஆட்சி காலத்தில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.


இந்நிலையில் அண்மை நாட்களாக விடுவிக்கப்படும் மக்களது காணிகளில் பெருமபாலும் வீடுகள் உடைக்கப்பட்டேயுள்ளன. அவ்வாறாயின் அவை தடுப்பு முகாம்களாகவோ சித்திரவiதைக கூடங்களாகவோ இருந்திருக்க முடியுமென்கின்றது அத்தகவல் வட்டாரம்.


உயர்பாதுகாப்பு வலயம் இன்று வரை விடுவிக்கப்படாத ஒரு புதிராகவே இருக்கின்றது. பல கட்டடங்கள் அண்மையில் இடிக்கப்பட்டமை சந்தேகத்தை தருகின்றது. இராணுவம் தற்போது சீன உதவியின் கீழ் அமைக்கும் படைமுகாம்கள் பல வசதிகளை கொண்டவை. இந்நிலையில் உடைத்தெடுக்கும் கற்களை கொண்டோ ஓடுகளை கொண்டோ வீடுகளை அமைக்கவேண்டிய தேவை இல்லை. அதனால் இடிப்பு விவகாரம் சந்தேகத்திற்கிடமானது தென்கின்றனர்.


புலிகளது முக்கிய தலைவர்கள் சிலர் பலாலியில் இன்றுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா மற்றும் முன்னாள் அரசியல்துறைப்பொறுப்பாளர் இளம்பரிதி போன்றவர்கள் குறிப்பிட்டு சொல்லத்தக்கவர்கள். அண்மையில் பாப்பா யாழ்.நகர விடுதியொன்றிற்கு படை அதிகாரிகள் சகிதம் வந்திருந்த வேளை அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


அவர்கள் கூட இறுதி யுத்த சாட்சியங்களுள் முக்கியவானவர்கள். அதனால் அவர்களை தடுத்து வைத்திருப்பதை கூட ரணில் மறுதலிக்கவே செய்வார். ஏனெனில் அண்மையில் கோத்தா முகாமெனவோ விசேட தடுப்பு முகாம்களெனவோ ஏதுமில்லையென அவர் தெரிவித்திருந்தார்.



« PREV
NEXT »

No comments