Latest News

April 26, 2015

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் உள்ள நாடு நேபாளம்!
by Unknown - 0

நேபாளம் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பிராந்தியத்தில் இருக்கும் ஒரு நாடு.

பூமியின் 'டெக்டானிக் பிளேட்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நிலத்தின் மேலடுக்குகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது அல்லது ஒன்றை விட்டு மற்றொன்று விலகும்போது நிலநடுக்கம் ஏற்படுகின்றது.

மத்திய ஆசியா அமைந்துள்ள யூரேசியன் டெக்டொனிக் பிளேட் மற்றும் அதன் கீழ்ப்புறமாக உள்ள இந்தியன் டெக்டொனிக் பிளேட் ஆகிய இரண்டு தட்டுகளின் உரசலின் விளைவாகவே இமயமலைத் தொடர் உருவானதாகக் கூறப்படுகின்றது.

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாளம் என்பது இந்த இரண்டு முக்கிய நில அடுக்குகள் தொடர்ந்து உரசும் புள்ளியில் இருக்கிறது என்பதால் நிலநடுக்கத்தின் மையப்புள்ளியை தன்னுள்ளே கொண்டிருக்கும் நாடாகவே நேபாளத்தை நிலவியலாளர்கள் கணித்து வந்திருக்கின்றனர்.

இந்த இரண்டு மிகப் பெரிய நில அடுக்குகளும், ஆண்டுக்கு இரண்டு சென்டி மீட்டர் அளவில் ஒன்றின் மேல் மற்றையதாக மேலேறிச் செல்கின்றன. இப்படியானதொரு செயற்பாடு காரணமாகவே தற்போதைய நில நடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் பிரித்தானிய பேராசிரியர் டேவிட் ரொதெரி.

பிரித்தானிய அரசாங்கத்தின் பிரத்தியேக ஆலோசகராக பணியாற்றிய, ஆக்ஸ்ஃபோர்ட் அபிவிருத்தி ஆலோசகர்கள் நிறுவனத்தின் உறுப்பினர் ஜோன் பெனட், ஒரு பாரிய நில நடுக்கத்தை எதிர்கொள்வதற்கு நேபாளம் ஆயத்தமாக உள்ளதா என்பது குறித்து, பத்து நாட்களுக்கு முன்னர் கணிப்பீடுகளை மேற்கொண்டிருந்தார்.

பேரழிவுக்கு முகம் கொடுக்கும் அளவுக்கு நேபாளம் தயாராக இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

புவித் தட்டுக்களின் இவ்வாறான நகர்வுகள் காரணமாக ஏற்படும் நிலநடுக்கங்களின் மோசமான பாதிப்புகளிலிருந்து, புவித் தட்டுக்கள் உரசும் புள்ளிகளில் அமைந்துள்ள உலகின் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளன.
« PREV
NEXT »

No comments