மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர் என சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன குழுவினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அம்பலப் படுத்தினார்.
சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததுடன் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்துள்ளமை வெளிச் சத்துக்கு வந்துள்ளதாக கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சி ஊடகப் பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலை மையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வெலியமுன அறிக்கையில் இடம் பெற்றுள்ள விடயங்கள் குறித்து அமைச்சர் விபரிக்கையில்,
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரராவார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் சிறிய மகன் சமீந்திர ராஜபக்ஷ இந்நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசியல் செயற்பாட்டுக்காக என்று கூறி பெண் ஊழியர் ஒருவரை வெளிநாடுகளுக்கு கூட்டிச் சென்றுள்ளார்.
யோசித்த ராஜபக்ஷ இலண்டனில் இருந்து மோட்டார் வாகன உதிரிப் பாகங்களை சிறிலங்கா எயார்லைன்ஸ் ஊடாக கொண்டுவந்துள்ளார்.
இவ்விதம் ராஜபக்ஷ குடும்பத்தினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை சட்டவிரோதமான முறையில் பயன் படுத்தியுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சட்டத்தரணி வெலியமுன மற்றும் நான்கு பேர் கொண்ட குழுவினர் 6 வார குறுகிய காலத்தில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடிகள் குறித்த அறிக்கையை பிரதமரிடம் கையளித்துள்ளனர்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரராகும். ஜனாதிபதியின் மைத்துணர் என்பதற்கு அப்பால் வேறெந்த தகுதியும் இவருக்கு இல்லை. அவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு கூட தோற்றவில்லை என்பது பாராளுமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.
இவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததுடன் தனக்கு வழங்கப்பட்டிருந்த பென்ஸ் கார் மற்றும் அதிசொகுசு பென்ஸ் காருக்கு மேலதிகமாக போலியான ஆவணங்கள் மூலம் இன்னொரு அதிசொகுசு மோட்டார் வாகனமொன்றை கொள்வனவு செய்துள்ளார்.
நிறுவனம் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த போதும் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக நிறுவனத்தை பயன்படுத்தி நிதி மோசடிகளில் நிஷாந்த விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
அவ்வாறே, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன பிரதான நிறைவேற்று உத்தி யோகத்தர் கபில சந்திரசேன 15இலட்சம் மாதாந்த சம்பளம் பெற்றுள்ளதுடன் மொபிடல் நிறுவனத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இதற்கு அடுத்ததாக யோசித்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் இருந்து வாகன உதிரிப்பாகங்களை சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன விமானத்திலேயே கொண்டுவந்துள்ளார்.
தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்விதம் செயற்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்த சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன இலண்டன் கிளை முகாமையாளரையும் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்துள்ளார்.
அவ்வாறே சட்டவிரோத ஆட்கடத்தல் செயற்பாட்டிலும் ஈடுபட்டதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பாதுகாப்பு தொடர்பாக எவ்வித அனுபவமும் இல்லாத ஒருவரை நாலரை இலட்சம் ரூபாவுக்கு அமர்த்தியமையும் வெளிவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்கவின் கோரிக்கைக்கு அமைய சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் அலுவல்களுக்காக என்று தெரிவித்து விமான பணிப்பெண்ணாக அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
விமானத்தில் இடம்பெறும் அலுவல்களுக்கு அப்பால் சகல கொடுப்பனவுகளுடன் 42 இலட்சம் ரூபா சம்பளமாக அவர் பெற்றுள்ளார்.
எனவே, வெலியமுன அறிக்கையின் பிரகாரம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளுக்கு முன்னாள் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத் தலைவரை விசாரணை செய்யுமாறும் நீதிமன்றத்தின் ஊடாக தண்டணை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
No comments
Post a Comment