Latest News

April 08, 2015

அரசாங்கத்தின் நிதிப்பிரேரணை 21 வாக்குகளால் தோற்கடிப்பு-அரசுக்கு முதல் அடி!
by Unknown - 0


400 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வெளியிட்டு அரசாங்கத்திற்கு கடன் பெறுவது தொடர்பான உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் மீதான தீர்மானத்தை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை நேற்று 21 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. 

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் மீதான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார்.

பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் நேற்று உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானத்தை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தை நடத்த இருப்பதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று திறைசேரி உண்டியல் தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். இவ்விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்தனர். பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா பதிலளித்து உரையாற்றினார். இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சுயாதீன எம்.பி. அஜித் குமார கோரிக்கை விடுத்தார். இதற்கமைய வரிசைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான வாசுதேவநாணயக்கார விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, டியூ குணசேகர உள்ளிட்ட 49 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தனர். ஜே.வி.பி. உறுப்பினர் விஜித ஹேரத் எதிர்த்து வாக்களித்திருந்ததுடன் சுயாதீன எம்.பியான அஜித் குமாரவும் எதிர்த்து வாக்களித்தார்.வாக்கெடுப்பு இடம்பெற்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் சபையில் இருக்கவில்லை.

திறைசேரி முறிகளை விநியோகிக்க சதி

பெருமளவு பண நோட்டுக்களை அச்சிடுவதற்காகவே அரசாங்கம் 400 பில்லியன் ரூபா திறைசேரி முறிகளை விநியோகிக்க சதி செய்கிறது. அரசாங்கத் தின் பிழையான பொருளாதாரக் கொள்கை யையே இது காட்டுவதாக எதிர்க் கட் சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக தான் 400 பில்லியன் திறைசேரி முறிகளை பெறுவதாக அஜித் பி பெரேரா கூறினார். ஆனால் அரசாங்கம் இன்று அதனை மறுக்கிறது. சர்வதேச மட்டத்தில் ரவி கருணாநாயக்கவினதும் அர்ஜுன மகேந்திரனதும் கையொப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புள்ளவர்களுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட்டிருக்க கூடாது. அர்ஜுன மகேந்திரனைவிட அஜித் நிவாட் கப்ரால் மேலானவர்.

பண நோட்டுக்களை அச்சிடுவதற்கான சதியாகவே திறைசேரி முறிகளை விற்க அரசு தயாராகிறது.23 ஆம் திகதி தேர்தலுக்கு செல்லும் அவசரத்தில் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தான் திறைசேரி முறிகளை விநியோகிக்க அரசு தயாராகிறது.

« PREV
NEXT »