தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் முன்னாள் போராளிகள் - குடும்பங்களிற்கு என்ன நடந்ததென்ற கேள்வி வலுக்கத் தொடங்கியுள்ளது :
படையினரது இரகசிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களிற்கு என்ன நடந்ததென்ற கேள்வி வலுக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சி மாற்றத்தின் இறுதி நாட்களில் அவர்கள் இல்லாதொழிக்கப்பட்டார்களா அல்லது இடம் மாற்றப்பட்டார்களாவென்பது பற்றி பலரும் சந்தேகங்களை எழுப்ப தொடங்கியுள்ளனர்.
திருகோணமலை கடற்படைத்தளமொன்றில் பேணப்பட்டதாக கூறப்படும் கோத்தா இரகசிய முகாமில் சுமார் 700 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.இறுதி யுத்த காலத்தில் கைதான மற்றும் சரணடைந்த விடுதலைப்புலிகளது மூத்த போராளிகளினை தடுத்து வைக்கின்ற இரகசிய முகாமாக அது இருந்துள்ளது. அங்கு 35இற்கும் அதிகமான போராளிகளது குடும்பங்களும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததும் உறுதியாகியுள்ளது.
இறுதி யுத்த காலத்தில் முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகல் ஊடாக சரணடைந்த பெரும்பாலான போராளிகள் தமது குடும்பங்கள் சகிதமே சரணடைந்திருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் வாகனங்களில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு பக்கமாகக்கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.எனினும் பின்னர் குறித்த போராளிகள் தொடர்பிலோ அவர்களது குடும்பங்கள் தொடர்பிலோ தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்ததுடன் குடும்பங்களால் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஆரம்ப விசாரணைகள் தற்போது முல்லைதீவு நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.
இறுதி யுத்த நாட்களில் கடல்வழியாக வெளியேற முற்பட்ட கடல்புலிகள் தளபதி சூசையினது மனைவி மற்றும் பிள்ளைகள் ,உறவினர்கள் இலங்கை கடற்படையினரிடம் அகப்பட்டிருந்தனர்.இது தொடர்பில் இலங்கை அரசு பெரும்பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தது.
கைதான கடல்புலிகள் தளபதி சூசையினது மனைவி மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை தளமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையினில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களது கைது பற்றிய செய்திகள் அம்பலமாகியிருந்த நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டிய சூழல் அரசிற்கு இருந்திருந்தது.
எனினும் இறுதி யுத்தத்தில் சரணடைந்த புலிகள் மற்றும் அவர்களது குடும்பங்களில் எஞ்சியிருந்தவை விடுவிக்கப்பட்டால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயிருந்தவர்கள் பற்றி இலங்கை அரசு பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையிலேயே படையினரால் பேணப்பட்ட கோத்தா இரகசிய தடுப்பு முகாம் பற்றி கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் அம்பலப்படுத்தியிருந்தார்.குறித்த இரகசிய தடுப்பு முகாம் பற்றி தன்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் அரசு சாட்சியங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அவற்றினை முற்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பதிலளித்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடற்படை தளபதி அவ்வாறு தடுப்பு முகாம் ஏதுமில்லையென தெரிவித்ததாக கூறினார்.எனினும் அத்துடன் விசயத்தை முடித்துக்கொண்ட அவர் மேலதிக தகவல்கள் ஏதனையும் வெளியிடவோ பகிர்ந்து கொள்ளவோ முன்வரவில்லை.
எனினும் ஜனாதிபதி தேர்தல் வரை குறித்த இரகசிய தடுப்பு முகாம் இருந்ததென்பதை உறுதியாக தெரிவித்த சுரேஸ்பிறேமச்சந்திரன் பிரதமர் கூறுவது போல இப்போது அவ்வாறெதுவும் இல்லையென்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் அவர்களது குடும்பங்களிற்கு என்ன நடந்ததென கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments
Post a Comment