சுவிற்சர்லாந்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. “இப்போதைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் எண்ணமில்லை” என ஒரேபோடாக போடாக போட்டு முடித்துள்ளார் மாவை சேனாதிராஜா. கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டுமென்ற கோரிக்கையை மென்மையாக வைத்தவர்கள் படிப்படியாக தொனியை அதிகரித்து மிரட்டல் பாணியில் விடுத்தபோதும், மாவை அசைந்து கொடுக்கவில்லை. கூட்டமைப்பை பதிவு செய்தால், அதிலுள்ள கட்சிகளுடன் இணக்கமாக வேலைகளை நகர்த்தி செல்ல முடியாதென மாவை கூறியுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் தமிழரசுக்கட்சியின் ஏகபோகம் அதிகரித்த நிலையில், ஏனைய கட்சிகள் புறக்கணிக்கப்பட தொடங்கியதும், கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது. எனினும், பல வருடங்களாக இந்த கோரிக்கையை தமிழரசுக்கட்சி கண்டுகொள்ளாமலிருந்தது. இந்தநிலையில், வடக்கு முதல்வரின் திடீர் எழுச்சியின் பின்னரான சூழலில், தமிழரசுக்கட்சியின் இருப்பிற்கு ஆபத்தாக நிகழலாமென்ற பரவலாக அபிப்பிராயங்கள் எழத் தொடங்கியதும், கூட்டமைப்பு கட்சிகளிற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு தமிழரசுக்கட்சி தயாரென அறிவித்தது. படிப்படியான செயற்பாடுகளின் பின்னர் கூட்டமைப்பை பதிவு செய்யவும் தயாரென அறிவித்தது.
இந்தநிலையில் சுவிஸிலுள்ள தமிழர் அமைப்பொன்றின் ஊடாக தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உள்நாட்டில் கூட்டமைப்பினருக்கு சட்டச்சிக்கல் ஏற்படாதிருக்க அந்த அமைப்பினூடாக தற்போது இயங்குநிலையிலுள்ள விடுதலைப்புலி செயற்பாட்டாளர்களே இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர். கலந்துரையாடலிற்கு செல்பவர்களின் பயண மற்றும் தங்குமிட செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டனர்.
கூட்டம் திட்டமிட்ட நேரத்தில் ஆரம்பமானபோதும், மாவையின் போக்குவரத்து சீர்கேட்டால் அவர் இரண்டு மணித்தியாலங்கள் கழித்தே கூட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் பதிவின் அவசியத்தை மிக மென்மையாக முன்னர் விடுதலைப்புலிகளின் தீவிர அரசியல் செயற்பாட்டாளராக இருந்த ஒருவர் புரிய வைத்தார். எனினும், அதற்கு மாவை மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் இரண்டு தரப்பிற்குமிடையில் தர்க்கம் ஆரம்பமானது. கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததால், தமது இறுக்கத்தை படிப்படியாக அதிகரித்து, மாவையை வற்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென மிரட்டல் பாணியில் கூறியுள்ளனர்.
இதனால் அலமலந்துபோன மாவை, “என்ன நீங்கள் இப்பிடி கதைக்கிறியள்?.. தலைவர் கூட என்னோட இப்பிடி கதைச்சதில்லை” என முறையிட்டுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டது, அதனால் அதன் சொற்படி நடக்க வேண்டும். கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்பது புலிகளின் விருப்பம் என உறுதியாக கூறியுள்ளனர்.
இந்த சமயத்தில் குறுக்கிட்ட ரெலோ பிரதிநிதி ஜனா- “நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமென எதிர்பார்க்க கூடாது. எதற்காக நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும்?” என பதிலளித்தார்.
இந்த தர்க்கங்களின் இறுதியில், தமிழ்தேசிய கூட்டமைப்பை இப்போதைக்கு பதிவு செய்யும் எண்ணமில்லை. கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு உருவாக்கியபோதே சொல்லவில்லை. அதனால் உங்கள் தலைவர் வந்து சொன்னாலும் பதிவு செய்யும் திட்டமில்லையென மாவை அடித்து கூறிவிட்டார். இது பற்றி இறுதி முடிவெடுப்பதானால் கட்சியுடன் கலந்தாலோசித்துதான் முடிவெடுக்க வேண்டுமென்றார்.
இந்த விடயம் தோல்வியில் முடிந்ததன் பின்னர், தமிழ்தேசிய மக்கள் முன்னணியை கூட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்ள வேண்டுமென அந்த பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள். இதற்கு சுரேஷ் பிரேமசந்திரன், ஜனா உள்ளிட்ட ஏனைய கூட்டணி கட்சிகள் சம்மதம் தெரிவித்தபோதும், மாவை மறுப்பு தெரிவித்து விட்டார்.
அந்தக்கட்சி ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறி சென்றது. மீண்டும் அப்படி செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என மாவை கேட்டார்.
எனினும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செல்வாக்கு புலம்பெயர்நாடுகளில் அதிகரித்து செல்வதையும், பரவலாக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டி, அவர்களை வெளியில் விட்டால் உங்களிற்குத்தான் பாதகம். எதிர்வரும் தேர்தல்களில் அவர்களும் பலமான சக்தியாக வெளியில் நிற்பார்கள். நீங்களும் எதிரணியில் நிற்பீர்கள் என்றார்கள்.
அவர்கள் வெளிநாடுகளில் சேகரிக்கும் நிதியை விட, நீங்கள்தான் அதிக நிதி கொடுக்கிறீர்கள் என மாவை அவர்கள் மீதும் குற்றம் சுமத்தினார்.
எனினும், அவர்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் கட்சிக்குள் ஆலோசித்துவிட்டுத்தான் முடிவு சொல்லலாம் என மாவை சொன்னார். எனினும், மாவை தலைவர் என்பதன் அடிப்படையில் உடனடியாக முடிவு சொல்லுமாறு வலியுறுத்தியபோதும், அவர் இறுதிவரை அதற்கும் சாதகமாக பதிலளிக்கவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முயற்சி இறுதி முயற்சியை, கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப்புலிகளின் எஞ்சிய அணியினர் முன்னெடுத்தபோதும், அதுவும் தமிழரசுக்கட்சியின் விட்டுக்கொடாத போக்கால் நிறைவேறாமல் சென்றுள்ளது.
2 comments
பூணை இல்லாத வீட்டில் எலிகளுக்கு எல்லாம் கொண்டாட்டம் !!
வரும்போது தெரியும் நீங்கள் எல்லாம் செல்லாக்காசு
Post a Comment