Latest News

April 23, 2015

அம்பேத்கர் தங்கிய வீட்டை கையகப்படுத்த பிரதிநிதிகள் குழுவினர் லண்டன் சென்றனர்
by admin - 0


லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை கையகப்படுத்த பிரதிநிதிகள் குழுவினர் நேற்று அங்கு பயணம் மேற்கொண்டனர்.

பிரதிநிதிகள் குழு 

இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி என்று போற்றப்படும் அம்பேத்கர், கடந்த 1921–22–ம் ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பொருளாதார பள்ளியில் கல்வி பயின்றபோது அங்குள்ள 2,050 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீட்டை, இப்போது அதன் உரிமையாளர் ஏலத்துக்கு விட திட்டமிட்டு இருக்கிறார். அந்த வீட்டுக்கு ரூ.40 கோடி மதிப்பிடப்பட்டு உள்ளது.

அம்பேத்கர் தங்கி இருந்த இந்த வீட்டை கையகப்படுத்த மராட்டிய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ரூ.5 கோடி செலவிட்டு வழக்கறிஞரையும், சர்வேயரையும் அரசு சமீபத்தில் நியமித்தது.

லண்டன் சென்றனர் 

இந்தநிலையில், அம்பேத்கர் தங்கிய வீட்டை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அனைத்து சம்பிரதாயங்களையும் நிறைவேற்றும் வண்ணம் சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே, இணை மந்திரி திலீப் காம்பிளே மற்றும் முதன்மை செயலாளர் உஜ்வால் உகே ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு நேற்று லண்டன் சென்றனர்.

அங்கு லண்டன் பொருளாதார பள்ளி இயக்குனருடன் சேர்ந்து இந்திய தூதரக அதிகாரியை அவர்கள் சந்திக்கின்றனர். பின்னர், வழக்கறிஞரை சந்தித்து பேசுகின்றனர். ஒரு வாரத்துக்குள் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து விட்டு வருகிற 29–ந் தேதி அவர்கள் மும்பை திரும்புகிறார்கள்.

இதற்கிடையே, அம்பேத்கர் தங்கிய வீட்டை மராட்டிய அரசு கையகப்படுத்தும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments