Latest News

April 23, 2015

சாட்சியமளிக்க கோட்டாவுக்கு 90 நாள் அவகாசம்!
by Unknown - 0

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிப்பதற்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் மற்றும் அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய நேற்றுக் காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு சமுகமளித்திருந்தார்.

கோத்தபாய விசாரணைக்கு அழைக்கப்பட்டமைக்கு எதிராக ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள் வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. பிவித்துரு ஹெல உறுமய இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தபோதும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எதிராக பொலிஸார் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவைப் பெற்றிருந்தனர்.

இருந்தபோதும் நேற்றுக் காலை ஆணைக்குழுவை சுற்றி பெரும் எண்ணிக்கையிலான கலகம் அடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். இது மாத்திரமன்றி வீதித் தடைகளும், தண்ணீர் பீச்சியடிக்கும்

வாகனமும் பொலிஸாரால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போதும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனது சட்டத் தரணிகள் சகிதம் ஆணைக்குழுவிற்கு சமுகமளித்தார். கோத்தாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, உதித்த லொக்கு பண்டார எம்.பி, மேல்மாகாணசபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்பன்பில, பொதுபலசேனாவின் செயலாளர் ஜானசார தேரர் உள்ளிட்ட பலர் அடங்கியிருந்தனர்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் சாட்சியமளிக்க ஆணைக்குழு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியிருப்பதாக அவருடைய சட்டத்தரணி தெரிவித்தார்.

காரில் நின்றவாறு ஆர்ப்பாட்டக் காரர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு கோட்டபாய ராஜபக்ஷ அங்கிருந்து சென்றார்.

செல்வதற்கு முன்னர் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் தான் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாது நேர்மையாகச் செயற்பட்ட அரசாங்க அதிகாரியென்றும் கூறியிருந்தார். இவ்வாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் நேர்மையாக நடக்கும் அதிகாரிகளும் அதிருப்தியடை வார்கள் எனவும் தெரிவித்தார்.

இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக் குழுவிலிருந்து புறப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அங்கிருந்து நேரடியாக வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சென்றார்.

விளக்கமறியலில் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் தனது சகோதரர் பசில் ராஜபக்ஷவைப் பார்வையிடுவதற்கு அவர் அங்கு சென்றிருந்தார்.

சிறைச்சாலைக்கு முன்னால் கூடியிருந்த பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, தன்னை தேசிய வைத்தியசாலையில் உள்ள கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு மாற்றுமாறு விளக்கமறியல் வெலிக்கடை சிறைச் சாலையின் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments