Latest News

April 09, 2015

ஆந்திரா “என்கவுண்ட்டர்” – மனித உரிமை கமிஷன் முன்னர் ஆஜராகின்றாரா தப்பித்த தமிழர்?
by admin - 0

ஆந்திர போலீஸ் துப்பாக்கி சூட்டில் தப்பியவர் தேசிய மனித உரிமை கமிஷன் முன் ஆஜராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் அப்பாவித் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழர்கள் போலீசாரை தாக்கியதாகவும், இதனையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ஆந்திர காவல்துறை தெரிவித்தது.

ஆனால் கொல்லப்பட்டவர்களின் அருகில் கிடக்கும் செம்மரங்களும் முன்பே வெட்டப்பட்டவை என்றும், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நகரி அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் தமிழகத்தில் உள்ள அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். திருப்பதி தொகுதி முன்னாள் எம்.பியான சிந்தா மோகன், 20 தமிழர்களையும் நகரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் கொன்று விட்டு, அவர்களது உடல்களை மட்டும் திருப்பதியில் கொண்டு போலீசார் போட்டுவிட்டதாக பேட்டியளித்துள்ளார். இதே குற்றச்சாட்டு அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டபோது, அவர்களிடமிருந்து உயிர் தப்பிய நபர் ஒருவர், தேசிய மனித உரிமை கமிஷன் முன் ஆஜராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது இந்த சம்பவத்தில் நடந்த உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

« PREV
NEXT »

No comments