பிரான்சு விமான விபத்தில் மீட்கப்பட்ட 2–வது கருப்பு பெட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், துணை விமானி விமானத்தை மலையில் மோதச் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
விமான விபத்தில் 150 பேர் பலி
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியில் உள்ள டசல்டர்ப் நகருக்கு சென்ற ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தின் விமானம் பிரான்சு நாட்டில் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 150 பேரும் பலி ஆனார்கள். இந்த கோர விபத்து கடந்த மாதம் 24–ந் தேதி நடந்தது.
விமானத்தில் கோளாறு ஏற்பட்டு விபத்து நடந்து இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.
துணை விமானியின் தற்கொலை நடவடிக்கை
மீட்புக்குழுவினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது, விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. அதில் பதிவாகி இருந்த தகவல்களை ஆய்வு செய்ததிலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி ஆன்டிரிஸ் லுபிட்ஸ், வேண்டும் என்றே விமானம் பறக்கும் உயரத்தை திடீரென்று குறைத்து அதை மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
விமானி காக்பிட்டுக்கு (விமானிகள் அறை) வெளியே சென்றிருந்த போது, அவரை உள்ளே வரவிடாமல் பூட்டிவிட்டு, தற்கொலை செய்யும் நோக்கத்தில் ஆன்டிரிஸ் லுபிட்ஸ் இவ்வாறு நடந்த கொண்டதாக கண்டு பிடிக்கப்பட்டது.
மற்றொரு கருப்பு பெட்டி
விபத்து நடந்த பகுதியில், அந்த விமானத்தின் காக்பிட் பகுதியில் உள்ள மற்றொரு கருப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த போதும், விமானி காக்பிட்டுக்கு வெளியே இருந்த சமயத்தில், துணை விமானி கதவை பூட்டிவிட்டு வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கியது உறுதி செய்யப்பட்டது.
துணை விமானி ஆன்டிரிஸ் லுபிட்ஸ் நன்றாக திட்டமிட்டே தற்கொலை செய்யும் நோக்கத்தில் விமானத்தை மலையில் மோதச் செய்து இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மன அழுத்தம்
இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இந்த விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஆன்டிரிஸ் லுபிட்ஸ் இணையதளத்தில், எந்தெந்த முறையில் தற்கொலை செய்வது என்ற விவரங்களையும், அவர் இயக்கிய ரக விமானத்தில் காக்பிட் அறைக்கதவின் பாதுகாப்பு முறைகள் பற்றியும் தேடிப்பார்த்து அறிந்து இருப்பதாக தெரிய வந்தது.
மேலும் அவருடைய மருத்துவ ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, விமானிக்கான பயிற்சியை முடிக்கும் முன் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
No comments
Post a Comment