Latest News

April 27, 2015

சந்திரிக்கா மற்றும் மஹிந்தவை இணைந்துக்கொண்டு ஜனாதிபதி, கட்சியை தலைமைத்துவம் தாங்கி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்…சமல் ராஜபக்ஷ
by admin - 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்க வேண்டுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பங்களிப்புடன் கட்சியின் செயற்பாடுகளை மேலும் பலம்பொருந்தியதாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை இணைந்துக்கொண்டு ஜனாதிபதி, கட்சியை தலைமைத்துவம் தாங்கி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அது அவ்வளவு சிரமமான காரியமல்ல. ஒரு சில பிரச்சினைகளே அங்கு காணப்படுகின்றன. நாங்கள் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் நான் பலதடவைகள் மனம் நோகடிக்கப்பட்டுள்ளேன். ஆனாலும் நாம் அதனை மறக்க வேண்டும். கடந்த காலங்களில் விட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறாதவகையில் நாம் பரஸ்பர புரிந்துணர்வுக்கு வரவேண்டும். எமது இந்த அரசியல் பயணத்தை நாம் உறுதியுடன் முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். எம்மிடையே பிரிவு ஏற்பட்டிருந்த போது 1977 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் எமக்கு என்ன நடந்தது என்பதனை நாம் நினைவுகூர வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்காக அண்மையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதென்றும் சபாநாயகர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

“இதற்கு முன்னரும் பல தடவைகள் நாம் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுக்களின் முக்கிய அதிகாரிகளை அழைப்பித்துள்ளோம். முன்பொரு சந்தர்ப்பத்திலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தலைவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக, நாம் அவரை பாராளுமன்றத்திற்கு அழைப்பித்திருந்தோம் தவிர அவருக்கு பணிப்புரைகளை வழக்குவதற்காக அல்ல. சில ஊடகங்கள் இந்த விடயத்தை திரிபுபடுத்த முயற்சிக்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments