Latest News

April 19, 2015

தமிழர் விவசாய நிலங்களில் கழிவுகள் கொட்டிய சிங்கள இராணுவம்
by admin - 0


யாழ்.மாவட்டத்தில் மக்களுடைய நிலங்களை கையகப்படுத்தி உயர்பாதுகாப்பு வலயங்களை வைத்திருப்பதாக அரசாங்கமும், படையினரும் கூறிவந்த நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியிருந்த மக்களுடைய பெறுமதியான விவசாய நிலங்களை படையினர் குப்பை கொட்டுவதற்காக பயன்படுத்தியமையினை கண்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் சுமார் 6381 ஏக்கர் மக்களுடைய நிலம் பாதுகாப்பு தேவைகளுக்காக உயர்பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ளது என படையினர் மற்றும் அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டு வந்தது. 
இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் படையினர் விவசாயம் செய்கின்றனர், கால்நடைகளை வளர்க்கின்றனர் என தமிழ் அரசியல் தரப்புக்கள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். 
அண்மையில் உயர்பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதியில் சில பகுதிகள் விடு விக்கப்பட்ட நிலையில் படையினர் விவசாயம் செய்யும் விடயமும், கால்நடைகளை வளர்க்கும் விடயமும் அம்பலத்திற்கு வந்திருந்தது. 
மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த பலாலி தெற்குப் பகுதியில் படையினரின் தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டு பைகள், காலணிகள், மருந்து போத்தல்கள், மதுபான போத்தல்கள், மற்றும் பெருமளவு பொலித்தீன் பைகள் என மக்களுடைய நிலங்களில் கொட்டப்பட்டிருந்தது. 
இது விடயமாக அங்கு துப்புரவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களோடு வினவியபோது, 
இந்த நிலம் செம்மண் நிலம் இங்கே மரக்கறிகள், வெற்றிலை, புகையிலை போன்றவற்றை விளைவித்து ஒரு காலத்தில் நாங்கள் செல்வந்தர்களாக வாழ்வதற்கு காரணமாக இருந்த மண். இந்த நிலத்தை சுற்றி கம்பி வேலிகளை அமைத்துக் கொண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக உயர்பாதுகாப்பு வலயமாக வைத்திருக்கின்றோம் என கூறிய அரசாங்கமும், படையினரும் இங்கே பாதுகாப்புக்காக ஒன்றையுமே செய்யவில்லை. 
மற்றைய இடங்களில் இடித்த வீடுகளின் கற்கள், தங்களுடைய குப்பைகளை கொட்டுவதற்கான இடமாகவே பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்த இடத்தில் நாங்கள் துப்புரவு செய்யும்போது இங்கே எந்தவொரு படைமுகாமும் இருக்கவில்லை. 
1990 காலப்பகுதியில் நாங்கள் இங்கிருந்து வெளியேறிய காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களுக்குப் பயன்படுத்திய பதுங்கு குழிகளும், காவலரண்களும் தூர்ந்துபோய் கிடக்கின்றன. இதனை தவிர வேறு எந்தவொரு இராணுவப் பயன்பாடும் காணவில்லை 
ஆனால் குப்பைகளும் கட்டிட கழிவுகளும், எங்களுடைய விவசாய நிலத்தில் தாரளமாக கொட்டப்பட்டிருக்கின்றது. அவ்வாறு கொட்டப்பட்ட குப்பைகளில் பல பெரும்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடக்கின்றது. 
இதனை அகற்றி நாங்கள் இந்த மண்ணில் மீண்டும் விவசாயம் செய்வதற்கு இன்னும் 5, 6 வருடங்கள் செல்லும் இதை நாங்கள் யாருக்கு சொல்ல முடியும்? சொன்னாலும் யார் கேட்கப்போகின்றார்கள்? என விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தை நினைத்து நொந்து கொண்டே இவ்வாறு கூறினார்கள்.
« PREV
NEXT »

No comments