Latest News

April 10, 2015

பேருந்தில் (பஸ்சில் )இருந்த 7 பேரை போலீஸ்(காவற்துறை) பிடித்து சென்றதை நிரூபிக்கும் முக்கிய சாட்சி ஆந்திர நீதிமன்றில் ஆஜர்படுத்த திட்டம்
by admin - 0


ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் பஸ்சில் இருந்த 7 பேரை போலீஸ் பிடித்துச் சென்றதை நிரூபிக்கும் முக்கிய சாட்சியை ஆந்திர கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

20 பேர் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் சென்றபோது ஆந்திர போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பிவந்த திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 55) நமது நிருபரிடம் கூறியதாவது:-

ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் மகேந்திரன் எனது தாய்மாமாவின் மகன். அவன் சென்னையில் பிளம்பராக வேலை பார்த்துவந்தான். அவனுடைய பக்கத்து வீட்டில் நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மகேந்திரன் சென்னையில் வேலைபார்த்து விட்டு 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தான். கடந்த 6-ந்தேதி என்னை சென்னைக்கு கட்டிட வேலைக்கு செல்லலாம் என அழைத்துச் சென்றான்.

பஸ்சில் தப்பித்தேன்

பஸ் திருத்தணி நோக்கி சென்றதால் சென்னைக்கு தான் கூட்டிச் செல்கிறான் என நினைத்தேன். ஆனால் திருத்தணியில் இறங்கி அங்கிருந்து ஆந்திரா சென்ற பஸ்சில் அழைத்துச் சென்றான். அப்போது தான் என்னை ஆந்திராவுக்கு அழைத்து செல்வது தெரிந்தது.

நகரிக்கு முன்னதாக பஸ்சை ஆந்திர போலீசார் நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்த சிலரை கீழே இறக்கி விசாரணை நடத்தினர். அப்போது மகேந்திரனையும் கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்றனர். நான் பெண்கள் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்ததால் போலீசார் என்னை விட்டுவிட்டார்கள்.

அதிர்ச்சி அடைந்தேன்

மகேந்திரனை போலீசார் பிடித்துச் சென்றதால் அதிர்ச்சியும், பயமும் அடைந்த நான் அடுத்த நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி நள்ளிரவில் வேறு பஸ் பிடித்து ஊருக்கு வந்துவிட்டேன். அடுத்தநாள் காலையில் திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் படங்களை பார்த்தபோது அதில் மகேந்திரனும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

வீட்டில் சும்மா இருந்த என்னை கட்டிட வேலைக்கு செல்லலாம் என அழைத்துச் சென்றுவிட்டு, போலீசாரின் துப்பாக்கி சூட்டில் அவன் பரிதாபமாக இறந்துவிட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டில் ஆஜர்

சேகர் சென்ற பஸ்சில் இருந்த மகேந்திரன் உள்பட 7 பேரை நகரி அருகே போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் அந்த 7 பேரும் அடங்குவர். எனவே இந்த வழக்கில் சேகர் முக்கிய சாட்சியமாக உள்ளார். இதனால் சேகரை தொண்டு நிறுவனம் ஒன்று பாதுகாப்பாக ரகசிய இடத்தில் வைத்து உள்ளது.

அதோடு ஆந்திர ஐகோர்ட்டில் சேகர் நாளை ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டிலும் சேகரை ஆஜர்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடத்துவது யார்?

செம்மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள் அனைவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மரம் வெட்டும் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் மட்டுமே என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் பலியானவர்கள் அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பது தான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments