Latest News

April 27, 2015

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 100 நாள்களுக்குள் கைதான தமிழர்களை விடுவியுங்கள் - பொன்.செல்வராசா
by admin - 0

புதிய அரசு அமைக்கப்பட்டு 100 நாள்களுக்குள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த 16 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, 

 
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கையயடுக்க வேண்டும் என்றும் சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சர் ஜோன் அமர துங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு அவசரக் கடிதமென்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
 
நாட்டில் புதிய அரசு அமைக்கப்பட்டு 23ஆம் திகதியுடன் 100ஆவது நாளை பூர்த்தி செய்துள்ள நிலையில், இந்த 100 நாள்களுக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பைச் சேர்ந்த 16 இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்டவர்கள் பூசா, மகசின், வெலிக்கடை சிறைச்சாலைகளில் தடுத்துவைக் கப்பட்டு அவர்கள் மீதான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 
 
இளம் குடும்பஸ்தர்களான இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சரணடைந்த பல இளைஞர்கள், புனர் வாழ்வளிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. 
 
இவ்வாறான நிலையில் மீண்டும் கைதுகள் நடைபெறுவது, இந்த நாட்டில் தமிழ் இளைஞர்கள் சந்தோசமாக வாழமுடியாது என்பதை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.  என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்டவர்கள் ஜனநாயக வழிக்கு வந்து, திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்கள். இவர்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறமுடியாத நிலை காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உழைத்து விட்டு மீண்டும் தமது பிள்ளைகள் மனைவியைப் பார்க்க வரும் போது, இவ்வாறான நிர்க்கதி நிலைக் குள்ளாக்கப்படுகின்றார்கள். 
 
கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், தாம் இந்த நாட்டில் சமாதானமாக வாழவேண்டும், பயபீதி இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு வாக்களித்ததுடன், அவரின் வெற்றிக்காகவும் பாடுபட்டோம். 
 
எங்களுக்குப் புதிய அரசு செய்யும் கைமாறு இதுதானா என்று எம்மிடம் கேட்கின்றார்கள்.
சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சராகிய நீங்கள், இது தொடர்பில் கவனம் எடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும். 
 
அத்துடன் இது போன்ற கைதுகள் இனிவரும் காலங்களிலும் தொடராமல் இருக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். என்று அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments