Latest News

March 16, 2015

இந்திய மீனவர்களை சுட முடியும் -மீண்டும் ரணில்
by admin - 0

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் உரிமை இலங்கைக் கடற்படையினருக்கு உண்டு என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரண்டு நாடுகளும் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


எவ்வாறெனினும் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த இரண்டு நாடுகளினதும் கடற்படையினருக்கு உரிமையுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான விஜயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ள நிலையில், பிரதமர் இவ்வாறான கருத்தை வெளியிட்டமை பெரும் சர்ச்சையை மீளவும் எழுப்பியுள்ளது.


இலங்கையின் கடற்பரப்பிற்குள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அத்து மீறல்கள் இடம்பெற்றால் அவர்களை சுட கடற்படையினருக்கு அதிகாரம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆழ் கடல் மீன்பிடியே மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் மீனவர்களை சுட முடியும் என கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இந்திய பிரதமர்கள் அடிக்கடி விஜயம் செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.


வடக்கில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்ற போதிலும், இந்தியா ஒட்டுமொத்த இலங்கையர்கள் தொடர்பிலுமே கவனம் செலுத்தி வருவதாகவும் வடக்கை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


« PREV
NEXT »