Latest News

March 16, 2015

சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைக்கும்தமிழக அரசு!!!
by admin - 0

சிறப்பு முகாம் என்ற  பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைக்கும் தமிழக அரசு!!!

இதுவரை விடுதலை கிடைக்காது... பல தடவைகள் தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் தூக்கம் மாத்திரை உட்கொண்டு பல வழிகளில் போராடி எதுவுமே கிடைக்காத திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ உறவுகளானவர்கள் நேற்று (15.03.2015)  தமிழக அரசு உணவு கொடுக்காததால் பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்!

உள்நாட்டு யுத்தத்தின் கொடூரங்களால் அங்கிருந்து உயிர் தப்பி, உயிராபத்தான கடற் பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்குள் அகதிகளாக அடைக்கலம் புகுந்த சில ஈழத்தமிழ் உறவுகளை எக்காரணங்களுமின்றி.... ஈழத்தமிழனாக வந்த ஒரே குற்றத்திற்காகவும், சில அரசியல் சுய இலாபங்களுக்காகவும் வெவ்வெறு பொய் வழக்குகளில் கைது செய்து பல வகையான சிறைகளில் இந்திய சட்டத்திற்கு முரணாக பல வருடங்களாக அடைத்து கொடுமைப்படுத்தி வைத்திருக்கின்றனர், தமிழகத்தின் உளுத்துப் போன கியூ பிரிவு காவல் துறையினர்.

இலங்கையில் உண்மையான போராளிகளை இனவாத சிங்கள அரசே விடுதலை செய்து வருகிறது!

தமிழக அரசோ... மாறாக, தமிழகத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்த ஈழத்து உறவுகளை புலிகளென பொய் வழக்குகளை புனைந்து... சிறைகளில் அடைத்து வைத்து கொடுமை செய்து வருகிறது!!!

இவ்வாறு பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி கிளைச் சிறையிலுள்ள ஈழத்து உறவுகள் தமக்கு உணவு, குடிநீர், தேனீர் மற்றும் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளுக்கென நியாயமான தொகையினை வழங்குமாறு கடந்த இரண்டு வருடங்களாக பல தடவைகள் பல முறைகளிலிலும் நீதியான போராட்டங்கள் ஊடாக தமிழக அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த அரச அதிகாரிகளோ... தமிழக அரசோ அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!!!!

PUCL அமைப்பைச் சேர்ந்த திரு. TSS மணி என்பவர் (பத்திரிகையாளர்) சிறப்பு முகாமில் ஈழ உறவுகள் அனுபவித்து வரும் கொடுமைகளையும்... அவர்களின் உணவுப் பற்றாக்குறையான அவல நிலையினையும் தமிழக அரசிடம் விளக்கி நிவர்த்தி செய்யும் படி வேண்டிக் கொண்டார்... அதற்கு தமிழக அரசின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஓரிரு நாட்களில் சரியான உணவு வழங்குவோம் என்றும்... அல்லது அதற்கான தொகையினை வழங்குவோம் என்றும் கடந்த மாதம் 15 திகதி உறுதியளித்திருந்தார்கள்... இன்றோடு ஒரு மாதமாகிவிட்ட நிலையில். ஆனால், அவர்கள் எதையுமே நிறைவேற்றியதாகத் தெரியவில்லை ! !!

வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டுச் சென்ற அரசு அதிகாரிகள், இன்று வரையும் அந்த உறவுகளை எட்டிக் கூடப் பார்க்கவும் வரவில்லை..! உணவிற்கான நியாயமான தொகையினை வழங்கவும் முன் வரவில்லை!!!

தமிழக அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளைப் போல்... தமிழக அரசு அதிகாரிகளின் வாக்குறுதிகளும் காற்றினிலே காணமல் போய் விட்டது!!

உங்கள் போலியான வாக்குறுதிகளாலும், அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் கொடுமைகளாலும்... அகதிகளாக தஞ்சம் புகுந்த ஈழத்து உறவுகளின் வலி நிறைந்த வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!!

அந்த உறவுகளின் வாழ்வானது... ஊர் இழந்து, உறவுகள் இழந்து, நாடு இழந்து கேட்க எந்த நாதியுமின்றி பல வலிகளைச் சுமந்த வாழ்க்கையோடு போராடி வருபவர்கள்!!

சாதாரணமாக இந்திய சிறைகளில் வாழும் ஒரு சிறைவாசிக்கு அனைத்து வசதிகளும் சிறைகளிலேயே வழங்கப்படும்.  அத்தோடு அவர்களது உறவுகளும் அடிக்கடி சென்று பார்ப்பதோடு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.  

அந்தச் சிறைகளோடு ஒப்பிடும்போது ஈழத்தமிழரை அடைத்து வைத்திருக்கும் "சிறப்பு முகாம்" என்ற சிறை, மிகவும் வித்தியாசமானது!!! எந்தவொரு தமிழக உறவும் இந்தச் சிறப்பு முகாம் சிறைக் கொடுமைகளை அனுபவிக்க முடியாது!! இந்தச் சிறப்பு முகாம் என்ற கொடுஞ்சிறையானது ஈழத்தமிழருக்கு மட்டுமே!!! அதனால்தான் அதன் உண்மையான நிலவரங்களையும்... அங்குள்ள ஈழத்தவரின் வலிகளையும் ஒரு சாதாரண தமிழகத் தமிழனால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை!!!

காரணம்,  "சிறப்பு முகாம்" என்ற பெயரை வாசித்து உள்வாங்கிக் கொண்டு மிகவும் சிறப்பான முகாம் என பலர் நினைத்து விடுகிறார்கள்.  பெயரில்தான் சிறப்பு இருக்கிறதே தவிர... வேறு எந்தவித சிறப்புக்களுமில்லை!!!

நான்கு அடுக்குப் பாதுகாப்போடு ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் இரவு பகலாக காவல்புரிந்து வரும் ஒரு கெடு கெட்ட அவலமான சிறையை ஏன்தான் "சிறப்பு முகாம்" என்று அழைக்கிறார்களோ தெரியவில்லை!!! 

எந்தச் சிறப்பும் இல்லாத... ஈழத்தமிழரின் வெறுப்பிற்குள்ளாகி பல ஈழத்துக் குடும்பங்களை நாசமாக்கிய இந்தச் "சிறப்பு முகாமை" "ஈழத்தமிழரின் தமிழக அவலச் சிறை" என்றே அழைக்கலாம்!

இந்த அவலச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு சாதாரண ஈழத் தமிழருக்கு தற்போது 70 ரூபா பணத்தைத் தவிர வேறு எதுவுமே வழகப்படுவதில்லை! எல்லாம் இழந்து வந்த நிர்க்கதியான ஒரு ஈழத்தமிழனுக்கு... தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொய்யான வழக்கை எதிர்த்து ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாடவோ... அல்லது தனது வழக்கு சம்பந்தமாக அடிக்கடி வழக்கறிஞருடன் அலைபேசியில் பேசவோ... பணம் மிகவும் தேவையான ஒன்றாகும்!

அது மட்டுமல்லாமல் நாளொன்றுக்கு மூன்று வேளையும் அவர்களே (தமிழக அரசு வழங்குகினற 70 ரூபாய் பணத்திற்குள்ளேதான்) உணவு  சமைத்து சாப்பிட வேண்டும். குடிநீர்,  தேனீர் இதுவும் உணவு வகையினில் சேர்ந்து விடும். 

தினமும் குளிப்பதற்கும்... துணிகள் துவைப்பதற்கும் சவர்க்காரம் பற்தூரிகை, பற்பசை மற்றும் முகச்சவரம் செய்ய முடி வழிப்பான் (ஷேவிங் றேசர்) முடி வெட்ட கத்திரிக்கோல் தலையில் தேய்த்துக் கொள்ள எண்ணை மற்றும் உடுத்துகின்ற உடை உறங்குகின்ற தலையணை பாய்... மற்றும சமையலுக்கான பாத்திரங்கள் என பலதும் அடங்கினாலும்...

தாம் சிறையில் இருப்பதால் தம்மோடு அகதியாக வந்து வெளியே துறந்த வெளி முகாமில் பிரிந்து தனிமையில் வாழும் தமது மனைவி பிள்ளைகளோடு வாரத்தில் இரண்டு தடவையாவது பேசுவதற்கான அலைபேசிக் கட்டணங்கள்... மற்றும் தமது கொடூரமான தனிமைச் சிறை வாழ்க்கையிலிருந்து மனதை மாற்றி அமைதியைத் தேடிக் கொள்ள ஏதாவது படம் வரைந்தோ.... கவிதைகள் எழுதியோ நிம்மதியடைவார்கள்.. அதற்கும் காகிதம், எழுது கோல் போன்றவை தேவையான ஒன்று!!

அடிக்கடி,  தமிழக அரசின் ஏமாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுவதால் மனு எழுதி தட்டச்சு செய்யவும்... அதை தாபாலில் அனுப்பவும் வேறு செலவு. இந்த அவலச் சிறைகளில் மருத்தவமனை இல்லாததால்... உடனடியாக ஏதாவது மருந்து தேவை என்றால் அதற்கு தனியாக மாத்திரைகள் வாங்கும் செலவு.. இப்படி பல தேவைகள் இருந்தாலும்....

முக்கியமான உணவு, குடிநீர், தேனீர்,  சவர்க்காரம்,  பற்பசை மற்றும் வழக்கறிஞர்களுடன் வழக்கு சம்பந்தமாக பேச இவர்கள் தருகின்ற 70 ரூபா ஒரு போதும் போதாது! 

இதுபற்றி பல முறை நீதிமன்றங்களில் ஈழ உறவுகள் வழக்கு தொடர்ந்தும் நீதிமன்றமே தமிழக அரசைக் கண்டித்து அந்த உறவுகளின் நியாயமான தேவையை பூர்த்தி செய்யுமாறு உத்தரவிட்ட போதும்.. தமிழக அரசோ அதைக்  காதில் போட்டுக் கொண்டதில்லை!!! 

அகதியாக... நாதியற்று வந்த ஒரு ஈழத்து உறவொருவரை பல வருடங்களாக சிறையில் அடைத்து வைத்து பட்டினி போட்டு கொடுமை செய்து உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்!!! இதைத் தெரிந்து கொண்டும் தமிழகத்தில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் இவர்களுக்காக போராட முன் வருவதுமில்லை!! கண்டதற்கெல்லாம் கூச்சலிடும் மனித உரிமைகள் அமைப்புக்கள் ஈழத்தமிழர் விடயத்தில் மட்டும் பாரபட்சம் பார்ப்பது ஏனோ தெரியவில்லை??!!

தமிழக அரசு,  பல தடவைகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏதையுமே நிறைவேற்றாமல் இருப்பதால்... உதவி செய்ய வருகின்ற ஓரிரு உறவுகளும் சலித்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் என்ன செய்கின்ற என இந்தியாவின் நீதிமன்றங்களே பல தடவைகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.!!!

இந்த நிலையில்தான் எதுவுமே கிடைக்காத சிறைவாசிகள் தமிழக அரசு உணவு கொடுக்காததால் பட்டினிப் போராட்டத்தை நேற்று (15.03.2014) ஆரம்பித்துள்ளார்கள்!

எங்கே போனார்கள் "தொப்புள் கொடி" என்று அடிக்கடி மேடைகளில் முழங்கித் திரியும் அரசியல்வாதிகள்???

உங்களின் கேடு கெட்ட அரசியல் விளையாட்டிற்கு ஈழத்தமிழ் உறவுகளாக கிடைத்தார்கள்??

உங்கள் தேசத்தில்... அதுவும் அருகில் இருக்கும் ஒரு நூறு பேரான "தொப்புள் கொடி" உறவுகளைக் காப்பாற்ற முடியவில்லை!!?? அதற்குள், இலங்கையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் இலட்சம் பேரான ஈழத்தமிழ் உறவுகளையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள்???

உங்கள் அரசியல் விளையாட்டிற்கும்... உங்கள் மேடைப் பேச்சுக்களுக்கும் ஒரு விவஸ்தையே இல்லையா?

அத்துமீறி தமிழக கடற்பரப்பினில் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை கைது செய்த உடனேயே பிணையில் விடுதலை செய்து இராஜ மரியாதையோடு அனுப்பி வைக்கும் கேடு கெட்டு உளுத்துப் போன கியூ பரிவு காவல்துறையே..! முடிந்தால் அந்த சிங்கள மீனவனை பிடித்து மேற்குறிப்பிட்ட ஈழத்து உறவுகள் போல் இரண்டு மாதங்கள் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துப் பார்???!!!

அப்போது உன் கேடு கெட்ட சட்டம் செத்துப் போகும்!!!

- வல்வை அகலினியன்.

« PREV
NEXT »