முதல் படத்திலேயே நம்மை கவனிக்க வைத்த இயக்குனர்கள் ஒரு சிலர் தான். அந்த வகையில் எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற ஹிட் படங்கள் கொடுத்து திரும்பி பார்க்க வைத்த சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் வலியவன்.
சுப்ரமணியபுரத்திற்கு பிறகு ஜெய்யின் நடிப்பிற்கு தீனி போடும் படி ஒரு முழுமையான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களில் காட்டிய ஒரே முகபாவனை தான் இவருக்கு தெரியும், என்பதற்காக 6 பேக் உடல் கட்டுடன் இந்த படத்தில் இறங்கி அடிக்க வேண்டும் என்று களம் கண்டுள்ளார் ஜெய்.
கதை
சுமார் ஹீரோவை சூப்பர் ஹீரோவாக மாற்றும் ஹீரோயின், இது தான் படத்தின் ஒன் லைன். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பழகி வரும் கதை தான். இதில் கிளைமேக்ஸில் கொஞ்சம் எமோஷனலுடன் தந்திருக்கிறார் சரவணன்.
ஒரு சப்வேயில் ஜெய்யை பார்க்கும் ஆண்ட்ரியா முதல் பார்வையில் ஐ லவ் யூ சொல்கிறார். இதை தொடர்ந்து அவர் யார்? எதற்காக இப்படி சொன்னார்? என்று ஒரு வாரம் தேடி அலைய, ஒரு வழியாக ஆண்ட்ரியாவே, ஜெய்யை தேடி வருகிறார்.அப்போது தான் Hangover பட பாணியில் ஜெய் தண்ணி அடித்து கொண்டு, ஆண்ட்ரியாவிடம் ஒரு யதார்த்தமான சந்திப்பில் அட்டாகசம் செய்கிறார். இதை ஆண்டிரியா, ஜெய்யிடம் கூற இந்த விஷயம் தெரிந்து அசட்டுத்தனமாக வழிந்து ஆண்ட்ரியாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஆனால், ஆண்ட்ரியா, நான் உன்னை காதலிக்க வேண்டும் என்றால், ஒருவனை அடிக்கனும், என்று ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவரை காட்டுகிறார். ஜெய்யும் இதற்கு ஓகே சொல்கிறார். ஜெய் எதற்கு இவ்வளவு தைரியமாக சம்மதிக்கிறார் என்பதே படத்தில் இறுதியில் வரும் ஒரே ஆறுதல் டுவிஸ்ட்.
வில்லனை பழிவாங்க இது தான் சரியான சந்தர்ப்பம் என ஜெய், பாக்ஸிங் கற்று கொண்டு, 6 பேக் எல்லாம் வைத்து கொண்டு, கிளைமேக்ஸில் வில்லனுடன் மோதி அவனை வெற்றி கொண்டாரா? என்பதே கதை.
நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்
ஜெய் கண்டிப்பாக இந்த படத்தில் தன்னை நிருபித்து காட்ட வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி சூப்பர் ஜெய். ஆண்ட்ரியா ‘உன்னால முடியும் பாஸ்கர்’னு சொல்ற மாதிரி ஜெய்யின் எனர்ஜி டானிக்காக வந்து செல்கிறார். ஆனால், ஜோடி பொருத்தம் இடிக்குது சரவணன் சார்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் படத்தின் காட்சிகள் அனைத்து கலர்புல்லாக இருக்கிறது. அதேபோல் டி.இமான் பின்னணி இசையில் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
க்ளாப்ஸ்
ஜெய் மிகவும் யதார்த்தமாக அறிமுகமாகி இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமான ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுகிறார். படத்தின் வசனம் பல இடங்களில் க்ளாப்ஸ் தான். அதிலும் பாலா ஒன் லைன் பன்ச் டயலாக்கில் கலக்குகிறார்.நமக்கு தான் நல்ல அழகான பொண்ணு அமையாது, கிடைக்கிற பொண்ண, அழகா ஏத்துக்கனும், போன்ற வசனத்தால் ஆண்களை மட்டும் கைத்தட்ட வைக்கிறார்.
நம்ம சூப்பர் ஜி சூப்பர் ஜி கலக்குறோம் ஜி புகழ் நடிகர் இதிலும் தலை காட்டி ஜெய்யின் காதலுக்கு பூஸ்ட் ஏற்றி விடும் காட்சிக்கு கைத்தட்டல் அடங்க நேரமாகிறது. ஒரு சண்டை என்றாலும் கிளைமேக்ஸ் சண்டை சூப்பர்.
பல்ப்ஸ்
எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்த ஜெய்யை தான் இப்படத்தில் முதல் பாதியில் காட்டியிருக்கிறார் சரவணன். இதன் காரணமாகவே சில நேரத்திற்கு பிறகு சலிப்பை உண்டாக்குகிறது. டி.இமான் சார் என்ன தான் ஆச்சு உங்களுக்கு, நல்ல தானா பாட்டு கொடுப்பீங்க, ரொம்ப சோதிச்சுட்டீங்க.அதிலும் இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் தியேட்டர் பாப் கார்னுக்கு டார்கெட் போல.
ஏனோ தானோ என்று செல்லும் முதல் பாதி கொஞ்சம் விறு விறுப்பு கூட்டியிருக்கலாம்.மொத்தத்தில் படத்தில் கடைசி அரை மணி நேரம் மட்டும் வலியவனா இருந்தா போதுமா சரவணன் சார்?

Social Buttons