பிரிட்டனில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் பிறகும் மேலும் ஒருமுறை பதவிக் காலத்தை கோரப்போவதில்லை என்று பிரதமர் டேவிட் கேமரன் அறிவித்துள்ளார்.
மூன்று பதவிக் காலம் பிரதமர் பதவி என்பது அதிகமானது, புதிய தலைமைத்துவமே நல்லது என்று டேவிட் கேமரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தனக்கு அடுத்து யார் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடும் என்பது குறித்து அவர் ஊகங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் தெரீசா மே அம்மையார், நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ண் மற்றும் லண்டன் மேயராக இருக்கும் போரிஸ் ஜான்சன் ஆகியோர் உள்ளனர்.
தனது எதிர்காலம் குறித்து டேவிட் கேமரன் விவாதித்துள்ளது ஏராளமான யூகங்களுக்கு வழிவகுக்கும் என்று பிபிசியின் அரசியல் விவகாரச் செய்தியாளர் கூறுகிறார்.
இன்னும் சில வாரங்களில் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது அரசியல் எதிர்காலம் குறித்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் எதிர்வரும் மே மாதம் ஏழாம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
Social Buttons