வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 1122.76 ஏக்கர் நிலத்தில் 10 வீதமான நிலத்தை கூட முழுமையாக மக்களுடைய பாவனைக்கு விடுவிக்கவில்லை என உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயந்துள்ள மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்கு 1968குடும்பங்கள் பதிவு செய்துள்ளதுள்ளனர். அதிலும் குறிப்பாக உடனடியாக மீள்குடியேற்றத்திற்கு விரும்பிய 1415 குடும்பங்களில் 200ற்கும் குறைவான குடும்பங்களே மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மேற்படி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மாவட்டத்தின் வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளிலிருந்து கடந்த 1990ம் ஆண்டு மக்கள் போரினால் இடம்பெயர்ந்த பின்னர் குறித்த பகுதிகளில் பெருமளவு பொதுமக்களுடைய நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த தை மாதம் உருவான ஆட்சிமாற்றத்தின் பின்னர் வலி.வடக்கு மாற்றும் வலி.,கிழக்கு பகுதிகளில் படையினர் பயன்படுத்தாத 1100 ஏக்கர் நிலம் மீளவும் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இந்த மீள்குடியேற்றம் 3 வாரங்களுக்குள் இடம்பெறும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும்
மீள்குடியேற்ற நடவடிக்கை குழு ஆகியன சுட்டிக்காட்டியிருந்தன.
இதன்படி பளை, வீமன்காமம் தெற்கு (ஜே.237), கட்டுவன் (ஜே.238), வறுத்தலைவிளான் (ஜே.241), குரும்பசிட்டி(ஜே.242), வசாவிளா ன் கிழக்கு (ஜே.244), வளலாய் (ஜே.284) ஆகிய 6 கிராமசேவகர் பிரிவுகளில் 1990ம் ஆண்டு 3 ஆயிரத்து 78 குடும்பங்கள் வாழ்ந்திருந்தனர்.
எனினும் பின்னர் மீள்குடியேற்ற பதிவுகள் மேற்கொள்ளப்பட்டபோது 1968குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். பின்னர் உடனடியாக மீள்குடி யேற்றத்திற்கு 1415குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் விரும்பம் தெரிவித்திருந்தனர். எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வசாவிளான் கிழக்கு, பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடவும், துப்புரவு செய்யவு ம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் 197.6ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் எனவும் இதில் உடனடியாக மீள்குடியேற விரும்பம் தெரிவித்த 260 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்ட நிலையில்,
விடுவிக்கப்படும் என அடையாளப்படுத்தப்பட்ட மிக பெரும்பாலான இடங்களில் படையினர் தொடர்ந்தும் முகாமிட்டு அமர்ந்திருக்கும் நிலையில் 260 குடும்பங்களில் 22 குடும்பங்களுடைய நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
மீதமான மக்கள் அனைவரும் ஏமார்ந்த நிலையில் திரும்பியிருக்கின்றனர். இவ்வாறே வளலாய் பகுதியிலும் மக்களுடைய நிலங்கள் ஒரு பகுதி விடுவிக்கப்படாமலிருக்கின்றது.
மேலும் வசாவிளான் பகுதியில் மீள்குடியேற்றப்படவுள்ள பகுதினை சுற்றி பாரிய படைமுகாம்கள் அமைந்திருக்கும் நிலையில் மக்கள் நாங்கள் எவ்வாறு நிம்மதியாக மீள்குடியேற முடியும்? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன்,
அச்சுவேலி- பலாலி இடையிலான போக்குவரத்து வீதி வசாவிளான் பகுதியுடன் மூடப்பட்டிருக்கின் றது. இதனால் பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் மீள்குடியேறிய மக்கள் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவேண்டிய பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை போன்றனவற்றுக்கு மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வசாவிளான் கிழக்கில் அனுமதிக்கப்படவுள்ள நிலப்பகுதியில் பெரும்பாலானை தோட்டக் காணிகளாகும். இந்நிலையில் மக்களுடைய வீடுகள், பாடசாலைகள், தேவாலயங்கள் போன்றன தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கின்றது.
எனவே மீள் குடியேற்றம் எங்கே நடக்கின்றது? என கேள்வி எழுப்பியிருக்கும் மக்கள், புதிய அரசாங்கத்தின் 100நாள் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், புதிய ஆட்சியாளர்களும் மக்களுடைய நிலங்களை முழுமயாக விடுவிக்காமல் கொஞ்ச நிலங்களை பெயரளவில் விடுவித்து ஏமாற்றிக் கொண்டிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
Social Buttons