Latest News

March 23, 2015

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் போராட்டம்!
by Unknown - 0

இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வருகின்ற உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தும், சர்வதேச தரத்திலான விசாரணையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்துள்ளன.

வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுமாக 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மாவட்ட அரச செயலகங்களுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.



காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நலன்புரி அமைப்புக்களும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.

காணாமல்போயுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் சர்வதேசத்தின் அர்ப்பணிப்புடனான ஈடுபாடு அவசியம் என்று வலியுறுத்தும் மகஜர் ஒன்றும் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இந்த 8 மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட காணாமல்போனோரின் குடும்பங்களும் உறவினர்களும் வவுனியா மன்னார் வீதியில் உள்ள பிரதேச செயலகத்திற்கு எதிரில் இருந்து பேரணியாக அரச செயலக வாயில் வரை சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.

இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள மகஜரில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எந்த விதமான அடிப்படை மாற்றங்களும் இன்றி, பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐநா சபைக்கு அளித்திருந்த உறுதிப்பாட்டுக்கு முரணான வகையில், புதிய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

புதிய அரசாங்கம் உறுதியளித்திருந்த உத்தரவாதங்களுக்கு முரணான வகையிலேயே தற்போதைய நடவடிக்கைகளும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்த மகஜர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐநா செயலணியின் இலங்கை விஜயத்திற்கு விரைவாக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களும் பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் அந்தக் குழுவினர் சுதந்திரமாக பேச்சுக்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
« PREV
NEXT »