மூதூர் கட்டைப்பறிச்சான் மகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த எனது மகள் பரீட்சைக்கு சென்று வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றவள் சென்றவள்தான் இன்றுவரை வரவில்லை என அழுது அழுது வாக்கு மூலம் கொடுத்துக் கொண்டிருந்தார் தாயொருத்தி. விசாரணை அதிகாரிகளோ துருவித் துருவி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவினர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து நான்கு நாட்கள் (பெப்ரவரி 28 மார்ச் 1, 2, 3) திருகோணமலைப் பிரதேசத்தில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தினார்கள். இவ்விசாரணைகள் பெப்ரவரி 28 மார்ச் 1 ஆகிய இரு தினங்களும் குச்சவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் மார்ச் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் திருமலை〪 பட்டணமும் சூழலும் பிரதேச சபை அலுவலகத்திலும் இடம்பெற்றது.
மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணையாளர் மனோகரி இராமநாதன், ஆணையாளர் சிரஞ்சனா வைத்திய ரட்ண〪 செயலாளர் எஸ். டபிள்யூ. குணதாச ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள். இவ்வாணைக்குழுவினர் முன் இறால் குழியில் தற்பொழுது வசித்து வரும் கோணேஸ்வரன் சுசீலா காணாமல் போன தனது 16 வயது மகள் பற்றி சாட்சியமளித்த போதே மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
மாவிலாறு யுத்தம் முடிவடைந்ததன் பின் நவம்பர் 22 ஆம் திகதி மாணவியான தனது மகள் கோணேஸ்வரி (16 வயது) பாடசாலையில் நடத்தப்படும் பரீட்சைக்கு மாலை 2 மணி போல் சென்றிருந்தாள். டிசம்பர் மாதம் க.பொ.த. பரீட்சை எழுத இருந்தவள் மீண்டும் வீடு திரும்பவேயில்லை. பாடசாலைக்கு சென்று அதிபரிடம் விசாரித்தோம். மகளைக் காணவில்லையெனக்கூறினார். வவுனியாவுக்குப் போய் தேடினேன். செஞ்சிலுவை சங்கத்திடம் முறையிட்டேன். தொடர்ந்து என்னால் எனது மகளைத் தேட முடியவில்லை. அவளுடைய தந்தையும் நோய்வாய்ப்பட்டு இருந்தமையே அதற்கு காரணம். அக்காலத்தில் என் மகள் போலவே பல ஆண் பிள்ளைகளும் காணாமல் போயிருந்தார்கள் என அந்த தாய் முறையிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினர் தமது முதல் நாள் விசாரணையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்த போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் கடுமையான எதிர்ப்புக் காட்டப்பட்டது. உள்நாட்டு விசாரணையாளர் முன் நாம் சாட்சியமளிக்க தயாரில்லை சர்வதேச விசாரணையாளர் வரட்டும் சாட்சியமளிக்க காத்திருக்கிறோமென கூறியே அக்கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 112 பேர் அழைக்கப்பட்டிருந்தும் தமிழர் தரப்பில் ஒருவரே சாட்சியமளிக்க வருகை தந்திருந்தார். ஆனால் 20க்கு மேற்பட்ட முஸ்லிம் தாய்மார்〪 உறவினர் சாட்சியமளித்தார்கள்.
அன்றைய தினம் தனது சகோதரன் காணாமல் போனது சம்பந்தமாக சாட்சியமளித்த திரியாய்க்கிராமத்தை சேர்ந்த குமாரசாமி துரைநாயகம் (65) இவ்வாறு விவரித்தார். 1990 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் திரியாய் கிராமத்தை நோக்கி படையை நகர்த்திய வேளை பயத்தின் காரணமாக மக்கள் பெருமளவில் முல்லைத்தீவுக்கு தஞ்சமடையச் சென்றார்கள். அவர்களுடன் எனது தம்பியும் சென்றார். குமாரசாமி சோதிநாதன் (வயது 26) இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த போது புல்மோட்டை இராணுவத்தால் கொக்கிளாய் பட்டிக்குடா என்னுமிடத்தில் வைத்து 19.06.1990 இல் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக வவுனியா கச்சேரியில் நடைபெற்ற விசாரணையின் போது (11.06.1991) பிரிகேடியர் இரத்நாயக்கவிடம் எனது தாயார் முறையிட்டார். பிரிகேடியர் கூறினார். வெலி ஓயா இராணுவ முகாமில் உள்ளார் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று விடுவிக்கப்படவில்லை. 26.9.1995 விசாரணைக்குழு முன் எனது தாயார் முறையிட்டார். ஆனால் இதுவரை எனது தம்பியை காண முடியவில்லை. மக்கள் விசாரணைக்குழு மீது நம்பிக்கையில்லையென்று கூறுகிறார்கள் நான் விசுவாசத்துடன் நம்பி வந்துள்ளேன். தம்பியைக் கண்டு பிடித்து தாருங்கள் என துரைநாயகம் வினயமாக வேண்டினார்.
அன்றைய தினம் பல முஸ்லிம் தாய்மாரும் சாட்சியமளித்தார்கள். புல்மோட்டையை சேர்ந்த அனித்தா பீ.பீ. என்னும் பெயருடைய தாய் சாட்சியமளிக்கை
யில்〪 17 வயதான எனது மகனை இனந்தெரியாதவர்கள் 1991 பங்குனி மாதம் அளவில் வீட்டுக்குள் புகுந்து பலாத்காரமாக பிடித்து சென்றார்கள் மீன்பிடித் தொழில் செய்யும் அவனுக்கு வயது 17 முகமட் ஹசினத் இன்னும் அவன் பற்றி அறிய முடியவில்லையென அழுத வண்ணம் சாட்சியம் கொடுத்தார்.
புல்மோட்டையைச் சேர்ந்த உதுமான் நாச்சியா என்ற பெயருடைய தாயார் சாட்சியமளிக்கையில்〪 ஊர்காவல் படையில் வேலை செய்த எனது மகன் முகமட் நஸீர் என்பவரை இரவு 11 மணி போல் நாலு பேர் ஆயுததாரிகளாக வந்து வீட்டுக்குள் புகுந்து கடத்திக் கொண்டு போனார்கள். அவர்கள் சிங்களத்தையும் தமிழையும் கதைத்தார்கள். விசாரித்து விட்டு அனுப்புவதாக கூறினார்கள் என அந்த முஸ்லிம் தாய் கூறினார்.
குச்சவெளி பிரதேச சபை செயலகத்தில் இரண்டாவது நாளாக (01.03.2015) நடைபெற்ற விசாரணையின் போதும் இரண்டொரு தமிழ் மக்களைத் தவிர யாரும் சாட்சியமளிக்க வரவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தவர் சாட்சியமளித்தார்கள். மூன்றாவது நாளாக (02.03.2015) ஜனாதிபதி விசாரணை குழுவின் விசாரணைகள் பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு முன் இடம்பெற்றதைப் போலவே இங்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியது. இருந்த போதிலும் பலர் ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்தார்கள்.
எனது மகன் டொமினிக்போல் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். 1990 ஆண்டு உக்கிரமான காலப்பகுதி. எவருமே வெளியில் நடமாடமுடியாத கொடிய காலப்பகுதியில் 1990 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் அளவில் கொழும்புக்கு பஸ்ஸில் சென்றவர் இராணுவச்சோதனைச்சாவடியில் வைத்து கடத்தப்பட்டிருக்கிறார். எனக்கு எட்டுப் பிள்ளைகள். இந்தப்பிள்ளையின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை.
அவனைப்பற்றிய ஆவணங்களை அவனைத் தேடித்தேடியே தொலைத்து விட்டேன் என கண்ணீர் மல்க கூறினார். அமலோற்பமேரியென்னும் தாய் திருமலைதலைமைக் காரியாலயம் தொட்டு செஞ்சிலுவை சங்கம் வரை முறையிட்டுள்ளேன். எந்த பயனும் தகவலும் கிட்டவில்லை என்றார்.
ஆலங்கேணி கிராமத்தில் அடி பிடி நடப்பதாகக் கேள்விப்பட்டேன். எங்கள் ஊரைச்சுற்றி இராணுவமும் ஊர்காவல் படையும் வளைத்து நின்றது. வழமையாக நடைபெறும் காரியமென பயந்து போய் வீட்டுக்குள் இருந்து விட்டோம். எனது மகன் சித்தசுவாதீனமற்றவன் பசி என்பதற்காக அருகிலுள்ள கடைக்கு உணவு வாங்க சென்றான். வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை. 17 வயது கொண்ட வ. பவன் கிண்ணியாவிலுள்ள அல்அக்ஷா பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தான். 1990 ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது. திகதி மாதம் ஞாபமில்லை எனக் பரிதாபத்துடன் தனது மகன் காணாமல்போன சம்பவத்தை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு விவரித்தார் கிண்ணியாவைச்சேர்ந்த சோமசுந்தரம் வர்ணகுலநாதன்.
(தொடரும்)
பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடினார்கள் வெளியே வந்து பார்த்த போது ஊரே ஓடியது. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் சண்டை நடக்கிறது என ஒரு சிலர் கத்திக்கொண்டே ஊருக்கு அருகிலுள்ள கண்டைக்காட்டுக்கு ஓடினார்கள். உயிரை கையில் பிடித்துக்கொண்டு குடும்பம் குடும்பமாக ஓடினோம். நாங்கள் போகுமிடமெல்லாம் ஊர்காவல் படையும் இராணுவமும் நின்றது. எனது மகன் நாம் ஓடுவதற்கு முன்னமே ஓடி விட்டான். காட்டுக்குள் எங்கு போனான் என்ன ஆனான் என்று தெரியவில்லை. கண்டைக்காட்டுக்குள் ஒழித்தவர்கள் அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டு பின் சீனக்குடா கிளப்பன் பேக் அகதிமுகாமுக்கு கொண்டு வரப்பட்டோம்.
எமது வீடுவாசல்களை எரிக்கப்பட்டு விட்டது.
அன்று உடுத்த உடுப்புடன் தான் வெளியேறினோம். 1995 ஆம் ஆண்டு வரை கிளப்பன் பேர்க் முகாமிலிருந்த நாம் சொந்த ஊருக்கு திரும்பினோம். மகனைக்காண முடியவில்லை. எனது மகன் காணாமல் போனது தொடர்பாக கிராம சேவகர் சீனக்குடா பொலிஸ் செஞ்சிலுவை சங்கம் அனைத்திலும் முறைப்பாடு செய்தோம். செஞ்சிலுவை சங்கத்தினரிடம் நாம் சென்ற போது அவர்கள் ஒரு பத்திரிகையைக் காட்டினார்கள். அந்தப்பத்திரிகையில் எனது மகனின் பெயருக்கு நேரே சிவத்த புள்ளடி இடப்பட்டிருந்தது.
இவ்வாறு தெரிவித்தார் இ.பொ.ச. வில் கடமையாற்றி இளைப்பாறிய ஆலங்கேணி கிராமத்தை சேர்ந்த நபர்.
கிண்ணியா கிராமத்தை சேர்ந்த ஜெயிலான் காதம்பீபீ 7 பிள்ளைகளின் தாய் ஆணைக்குழுமுன் இவ்வாறு சாட்சியம் அளித்தார். எனது மகனின் பெயர் கா. முகமது அலி. கடத்தப்பட்டபோது அவருக்கு வயது 32. 1986 ஆண்டு அந்த சம்பவம் நடைபெற்றது. காலை சுபத்தொழுகை நேரம் நாலு பேருடன் தம்பலகாமம் கல்பிட்டியா குளம் என்னுமிடத்துக்கு மீன்பிடிக்கப் போனார்.
என்ன நடந்தது ஏது நடந்ததென்று தெரியாது. அவரைத் தேடிக் கொண்டேயிருந்தோம். அக்காலப் பகுதியில் கடுமையான வான் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலம் 9 நாளைக்குப் பிறகுதான் தெரிய வந்தது. மகனை கடத்திவிட்டார்கள் என்று. அவனுடன் போன நாலு பேரும் கடத்தப்பட்டிருக்க வேண்டுமென்று நம்புகிறோம்.
இவ்வாறு தெரிவித்தார் அந்த வயது போன முஸ்லிம் தாய்.
திருகோணமலையில் கேணியடியில் குடியிருந்த எனது மகன் ஒரு ஓட்டோ சாரதி. நாங்கள் 7 ஆம் வட்டாரம் கட்டைபறிச்சானைச்சேர்ந்தவர்கள் .2004 ஆம் ஆண்டு ஜனவரி முதலாந்திகதி (01.012004) கடத்தப்பட்டார். அவருமில்லை அவருடைய ஓட்டோவும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லையென கட்டைப்பறிச்சானைச்சேர்ந்த நமசிவாயம் துரைநாயகம் என்ற தந்தை தனது மகன் தேவசேனாதிபதி காணாமல் போனது பற்றி தெரிவித்ததோடு எனது மகனை தேடித்தேடியே எனது மனைவி அந்தக் கவலையில் இறந்து போய்விட்டாள் என்று கண்கள் பனிக்க தெரிவித்தார் அந்த தந்தை.
தம்பலகமம் ஐயனார் திடலைச் சேர்ந்த பவளமலர் தனது மகன் காணாமல் போனமைபற்றி வரண்ட கண்களுடன் இப்படிச் சம்பவத்தை விவரித்தார். எனக்கு இரண்டு பெண் பிள்ளையும் ஒரு ஆண் பிள்ளையும் 1990 ஆம் ஆண்டளவில் திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். 19 வயது கொண்ட எனது மகன் ஜெயவண்ணனை வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் விளக்கத்துக்கு வரும்படி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் நடைபெற்றது. வன்னியில் பயத்தின் காரணமாக வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தோம். அப்பொழுதே இந்தக் கொடுமை நடந்தது என்றார்.
எனக்கு மூன்று பிள்ளைகள். மிக மோசமான காலப்பகுதி கடத்தல்களும் கொலைகளும் துப்பாக்கி வேட்டுகளும் தேடுதல் கொடுமைகளும் மலிந்து போய் கிடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் பிள்ளைகளின் பசியைப் போக்கவாவது வேலைக்குப் போக வேண்டுமென்ற கவலையுடன் எனது கணவன் கார்த்திகேசு உதயராசா (23) துவிச்சக்கர வண்டியில் மிக மிகக் கிட்டிய தூரத்தில் உள்ள திருமலை தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்துக்கு கூலி வேலைக்குப் போனார். போனவரை நாம் மீண்டும் காண முடியவில்லை. எனது பிள்ளைகளை காணவேண்டுமென ஆண்டுக் கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என தனது கணவனின் காணாமல் போன சம்பவத்தை விபரித்தார் பாலையூற்றைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க உதயராசா எமலியா.
வயல் வேலைக்கு அன்றாட பிழைப்புக்காக சென்றார் எனது மகன். 2005 ஆம் ஆண்டு இச்சம்பவம் நடைபெற்றது. இன்றைக்கு 10 வருடங்கள் ஆகியும் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறோமென கிண்ணியா ரகுமானியா நகரைச் சேர்ந்த அப்துல் சமது உம்மா தெரிவித்தார்.
தொடர்ந்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு திருகோணமலையில் எதிர்ப்புக்காட்டப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாதத்தப்பட்டது. நாலாவது நாளான (03.03.2015) அன்றும் பெருந்தொகையான மக்கள் செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இன்றைய தினம் பெருந்தொகையானோர் காணாமல் போன தமது உறவுகள் பற்றி புதிதாக பதிவதற்கு வந்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான முரண்பட்ட சூழ்நிலையிலும் பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் நாலாவது நாளாக (03.03.2015) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது தமிழ் முஸ்லிம் சிங்கள உறவுகள் சாட்சியம் அளிக்க வந்திருந்தார்கள்.
எனது கணவன் ஒரு விவசாயி. அன்றைய தினம் (05.04.1985) இரண்டு பேர் எனது வீட்டுக்கு இரவு 9 மணி போல் வந்தார்கள். இவரை விசாரணை செய்ய வேண்டும் அழைத்துக் கொண்டு போகிறோமென ஒரு மாதிரியான மொழியில் பேசினார்கள். அவர்கள் யார்? எதைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நாம் பயந்து போய் இருந்த காலம். ஆனால் நாம் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் தான் வசித்து வந்தோம். எனது கணவனுக்கும் இயக்கத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை. இக்காலப்பகுதியில் பலர் காணாமல் போனது பற்றி நான் அறிவேன் என தனது கணவன் வடிவேலு கிருஸ்ணபிள்ளை காணாமல் போனமைபற்றி கும்புறுப்பிட்டியைச் சேர்ந்த கி. இராஜேஸ்வரியே சாட்சியமளித்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கிண்ணியாவில் வசித்து வந்தோம். தற்பொழுது நான் லிங்க நகரில் வசித்து வருகிறேன். 1990 ஆம் ஆண்டு நாம் கிண்ணியாவில் வசித்து வந்த காலத்தில் யூலை 7 ஆம் திகதி எனது கணவனுக்கு அந்த கொடூரம் நடைபெற்றது. இந்திய இராணுவம் வெளியேறியிருந்தது. ஆறு பிள்ளைகளின் தந்தையான எனது கணவன் சின்னையா வேலாயுதம் (32) இனக்கலவரத்தின் உச்சம் நிலவிய காலம். எனது கணவரை இராணுவம் கைது செய்து கொண்டு போவதாக அயலவர்கள் என்னிடம்
ஓடி வந்து கூறினார்கள் ஒரு சில நாட்களுக்குப்பின் கேள்விப்பட்டேன் எனது கணவன் சுடப்பட்டார் என்று. ஆனால் எனக்கு பொலிஸார் சொன்னார்கள் உனது கணவனை புலிகள் சுட்டு விட்டது என்று. அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யானும் எனது பிள்ளைகளும் தஞ்சம் கோரி யாழ்ப்பாணம் ஓடினோம். 2001 ஆம் ஆண்டு திரும்பி வந்து சீனக்குடா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளேன் என கிண்ணியாவைச் சேர்ந்த வேலாயுதம் தவமணி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
எனது மகன் தெஹிவளையிலுள்ள வெப்டினன் கொமாண்டர் பொயகொட என்பவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் திடீரென காணாமல் போய்விட்டார். திருகோணமலை புளியங்குளத்தை சேர்ந்த யோகராஜா அன்னபூரணம் இவ்வாறு சாட்சியமளித்தார் 1990 ஆம் ஆண்டளவில் மேற்படி லெப்டினன்ட் கிளப்பன் பேர்க் முகாமுக்கு வருவார் இவர் எனது மகன் புவனநாயகத்தை அங்கிருந்து கூட்டிக்கொண்டு தனது தெஹிவளை வீட்டில் வைத்தார். நாங்கள் அப்பொழுது பச்சை நூல் அகதி முகாமிலிருந்தோம். பதவி உயர்வு பெற்று செல்வதாக கூறிக் கொண்டே அவர் எனது மகனை தன்னுடன் அழைத்து சென்றார். திடீரென ஒருநாள் அவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. 06.12.1992 மகன் காணாமல் போய்விட்டானென்று. நாங்கள் மகனைத் தேடி கொழும்புக்கு ஓடினோம். பொயகொட சொன்னார் வீட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த வரை அதிகாலை 4 மணியிலிருந்து காணவில்லையென்று. எங்கும் தேடியும் காணவில்லை. எனது மகனை அவர் நன்றாகப்பார்த்தார். 1999ஆம் ஆண்டு எனது கணவர் இறந்து விட்டார். அன்று வருவான் என்று எதிர்பார்த்தேன். இன்று வரை காண முடியவில்லை. இவ்வாறு கூறினார் புளியங்குளத்தை சேர்ந்த யோகராசா அன்னபூரணம்.
தனது நண்பர்களுடன் வெருகல் கோயிலுக்குப் போனவர் இன்று வரை வீடு திரும்பவேயில்லை. பள்ளிக் கூடத்தில் படித்த எனது மகன் காணாமல் போனபோது வயது 17 சம்பூர் கிராமமே எமது பூர்வீக கிராமம். குகதாஸ் பியகரன் அன்று காலை 26.06.2006 வெருகல் கோயிலுக்கு போய் வருகின்றேன் என சொல்லி விட்டு காலையில் 7 மணிக்குப் போனவன் சைக்கிளில் தனது நண்பர்களுடன் மீண்டும் வரவேயில்லை. அவனுடைய ஞாபகமாக அவன் கொண்டு சென்ற சைக்கிள் கூட கிடைக்காதா என ஏங்கியதுண்டு. எந்தக் கூட்டாளிகளுடன் போனான் என்ற விபரமும் எனக்குத் தெரியாது என குகதாஸ் யோகேஸ்வரி என்ற பெயருடைய தாய் தனது வரண்டு போன கண்ணில் பட்டும் படாமலும் கண்ணீர் வர தனது மகனின் காணாக்கதையைக் கூறிக் கொண்டிருந்தார்.
இவ்வாறு மகனை இழந்த தாய்மார், புருஷன் இழந்த மனைவிமார், சகோதரனை இழந்த சகோதரர்கள், உறவினரை இழந்த சொந்த உறவுகள் என பலர் அளித்த சாட்சியங்கள் பதிவுபடுத்தப்பட்டது.
Social Buttons