Latest News

March 13, 2015

இலங்கையர்களுக்கு இந்திய விசா ஒன்-எரைவல்
by admin - 0


13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பின்னர், நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது இதனை அறிவித்தார்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் அபிலாசைகளும் நிறைவேற்றப்படும் வகையில் எதிர்காலம் ஒன்றை உருவாக்குவாற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்கும் குறிப்பாக தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சுய கௌரவம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழிஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு 13ஆம் திருத்தச்சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன் அதற்கு அப்பால் செல்வதே தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கையர்களுக்கு இந்தியாவின் வருகைக்கு பின்னரான விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்துடன் நடைமுறைக்கு வரும் என்றும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான இந்திய தலைவர்களின் விஜயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, இந்திய சுதந்திரத்தின் தந்தையாக கருத்தப்படும் மகாத்மா காந்தி 1930ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அந்த காலப்பகுதியில், பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்த விஜயத்திற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

அவரது விஜயத்தின் பின்னர் இலங்கையில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன், டொனமூர்  அரசியல் அமைப்பிற்கு எதிரான நிலைப்பாடும் தோற்றம்  பெற்றது.

1939ஆம் ஆண்டு இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவகர் லால் நேரு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அவர் 1950ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதன் பொருட்டும், 1957ஆம் ஆண்டு வெசாக் பூரணை தினத்திலும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஜவகர் லால் நேருவின் புதல்வியும் இந்தியாவின் பிரதமருமான இந்திரா காந்தி 1967ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார்.

1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

பின்னர் 1976ஆம் ஆண்டு கச்சதீவு இலங்கை உடமையாக்கப்பட்டது.

இந்த காலப்பகுதியில் இந்திரா காந்தி அணிசேரா மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்தார்.

இந்திய பிரதமர் மோராஜ் தேசாய், ஜனாதிபதி ஜே ஆர். ஜெயவர்தனவின் பதவியேற்பில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்தார்.

இந்திரா காந்தியின் மகனான ராஜூவ் காந்தி இந்திய பிரதமர் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அதன்பின்னர் பிரதமர்களான அட்ல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் சார்க் மாநாடுகளில் கலந்து கொள்வதற்பொருட்டு இலங்கை வந்திருந்தனர்.

எனினும் ராஜுவ் காந்தியின் விஜயத்தை அடுத்து 28 வருடங்களின் பின்னர் நரேந்திர மோடியே முதல் தடவையாக இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அதேநேரம் அவர் நாளைய தினம் யாழ்ப்பாணம் செல்வதன் ஊடாக, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் முதலாவது இந்திய பிரதமராகவும் கருதப்படுகிறார்.

இதுகுறித்த தாம் பெருமையடைவதாக கடந்த தினம் நரேந்திர மோடி தமது பேஸ்புக் தளத்தில் நிலை தகவலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



நாட்டுக்குள் பிரவேசித்ததன் பின்னர் விசா வழங்கும் 'ஒன்-எரைவல்' விசா வசதியை இலங்கையர்களுக்கும் வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ் அறிவிப்பை இங்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இவ்வசதி  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.



« PREV
NEXT »