தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் எமக்கான பரிகாரநீதியினை அனைத்துலகத்திடம் வேண்டுவதோடு, தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியில் நீதீமன்றத்திடம் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி,ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் அணிதிரளுமாறு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
மார்ச்16ம் நாள் திங்கட்கிழமை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் இடம்பெறவுள்ள நீதிக்கான ஒன்றுகூடலுக்கு வலுவூட்டி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியொன்றின் ஊடாக, இலங்கைத்தீவில் இயல்புநிலை வந்துவிட்டதான தோற்றப்பாட்டடை ஏற்படுத்த, புலம்பெயர் தமிழர்களின் வருகையினை எடுத்துக்காட்ட முனையும் சிறிலங்காவின் வியூகத்தினை முறியடிக்க சிறிலங்காவைப் புறக்கணிப்போம் என்ற உறுதிப்பாட்டையும் ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில்எடுத்துக் கொள்ள அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கம் புதிய ஆட்சி என்ற ஒப்பனையுடன் தனது குற்றங்களில் இருந்து தப்பிக்கின்ற வியூகங்களை வகுத்து செயற்பட சிறிலங்கா அரசு முனைகின்றது.
தமது நலன்கள் சார்ந்து சிறிலங்கா அரசாங்கத்தை தம்முன்னே பணியவைக்கும் நோக்கில், அன்று சிறிலங்கா மீது யுத்தக்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களைக் கொடுத்த பலமிக்க பல அரசுகளும், சிறிலங்காவில் புதிய அரசாங்கம் புதிய ஆட்சி என மந்திரச்சொற்களாக உலக அரங்குகளில் உச்சரிக்கின்றனர்.
இத்தகைய போக்குகளை நாம் அனைவரும் விழிப்புடன் எதிர்கொண்டு, சகலமட்டங்களிலும் எமது செயற்பாடுகளை கூட்டாகவும் , தனித்தும் தீவிரப்படுத்த வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.
இச்சூழலில், வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தொடர்பிலான தீர்மானம், யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்னெடுகப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், காணாமல் போனவர்கள் தொடர்பிலான சிறிலங்கா ஜானதிபதி ஆணைக்குழுவினை காணாமல்போனவர்களின் உறவுகள் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவு மற்றும் சிவில் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் ஆகியன சிறிலங்காவின் உண்மையான முகத்தினை அம்பலப்படுத்தி வருகின்றன.
தமிழீழத் தாயகத்தின் இச்செயல்முனைப்புக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தேசங்களில் வாழும் நாமும் எமது பங்கினை ஆற்ற வேண்டிய தருணமிது.
முக்கியமாக, தாயகம் செல்லுகின்ற புலம்பெயர் தமிழர்களின் வருகையினை புள்ளிவிபரங்களுடன் அனைத்துலகத்தின் முன் அடுக்கி, இலங்கைத்தீவில் இயல்புநிலை தோன்றிவிட்டதென்ற தோற்றப் பாட்டையும், ஒற்றையாட்சி ஒன்றுபட்ட இலங்கை, இலங்கையர்கள் என தனது சிங்கள பௌத்த மேலாண்மையின் கீழ் தமிழர்களை அடக்கி ஓடுக்குவதனை நியாயப்படுத்தவும் சிறிலங்கா அரச இயந்திரம் முனைகின்றது.
சிங்களத்தின் இச்சூழ்ச்சிகளை விழிப்புடன் நாம் எதிர்கொள்வதோடு, "சிறிலங்காவைப் புறக்கணிப்போம் " என்ற உறுதிப்பாட்டை ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் நாம் உறுதியெடுத்துக் கொள்வோம்.
தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலகத்திடம் வலியுறுத்துவதோடு, தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியில் நீதீமன்றத்திடம் பாரப்படுத்துமாறும் ஐ.நாவை கோருவோம்.
மனித உயிர்களை விட தங்களது நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள், நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்தே நின்றன.
நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியனை கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன.
இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் எமது கோரிக்கைகளை உரக்க ஒலிப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TGTE, Transnational
Government of Tamil Eelam
Social Buttons