தேர்தல் முறை மாற்றம் என்ற போர்வையில் பொதுத் தேர்தலை ஒத்திப் போடுவதே எதிர்க்கட்சியின் நோக்கமாக இருக்கின்றதென்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக் கோவை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறுகையில், 19 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கத் தயாரா? 13 வருடங்களாக மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்த அவர்கள் இந்தத் தேர்தல் முறை மாற்றத்தை மிக இலகுவாகச் செய்திருக்க முடியும்.
ஆனால் தினேஸ் குணவர்தன தலைமையிலான குழு முன்வைத்த தேர்தல் முறை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராகியிருக்கவில்லை. ஆனால் தற்போது 13 வருடங்களாக தாம் நிறைவேற்றாததை உடனடியாக எம்மை நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகின்றனர். இதன் மூலம் பொதுத்தேர்தலை ஒத்திவைக்கவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாரா எனக் கேட்டார். இப்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான ஜோன் செனவிரட்ண ஆதரவளிக்க நாம் தயார். ஆனால் நிறைவேற்றதிகார ஒழிப்பும் தேர்தல் முறை மாற்றமும் ஒன்றாகக் கொண்டு வரப்படவேண்டுமென்பதே எமது நிபந்தனை என்றார்.
Social Buttons