Latest News

March 19, 2015

சர்வதேச மேற்பார்வையில் உள்ளக விசாரணை நடத்தாவிடின் மகிந்த ஆட்சியின் கதியே ஏற்படும்-சுமந்திரன் எச்சரிக்கை
by Unknown - 0


இலங்கை அரசின் உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையுடனேயே நடக்க வேண்டும். இல்லையேல் மகிந்த ஆட்சிக்கு ஏற்பட்ட நிலையே இந்த ஆட்சிக்கும்  ஏற்படுமென தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரன், காணாமல் போனோர் தொடர்பான   பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லைன்றும் குற்றம் சாட்டினார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில், காணாமல் போனோர்  தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும்  பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லை. 

இந்த ஆணைக்குழுவின் சில விசாரணைகளில் நானும் பங்குபற்றியுள்ளேன். இந்த  ஆணைக்குழுவுக்கு பல்வேறு  முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சாட்சிகள் பல்வேறு விதமான முறைகளில் அழைக்கப்படுகின்றனர். இந்த  சாட்சிகளிடம்  ஆணைக்குழு, உங்கள் பிள்ளைகளுக்குப் பதிலாக ஆடு தருகின்றோம்,  கோழி தருகின்றோம் எனக் கூறுகின்றது. 

ஆனால் காணாமல் போனோரின் உறவுகளோ எமக்கு ஆடு, கோழி வேண்டாம். எமது பிள்ளைகளைத் தாருங்கள் எனக் கதறிய  பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தான் இந்த ஆணைக்குழுவின் விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலையில் இந்த ஆணைக்குழுவின் பணிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆணைக்குழு மட்டுமன்றி இதற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள டெஸ்மன் டி சில்வா தலைமையிலான சர்வதேச ஆலோசனைக்குழுவினர் மீதும் எமக்கு   நம்பிக்கை இல்லை. 

எனவே இவ்வாறான விசாரணைகள் எமக்குத் தேவையில்லை. இவ்வாறானதொரு நிலையில்தான் சர்வதேச விசாரணை அறிக்கையை ஒத்திவைக்குமாறும் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும்  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை அரசு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்ததுடன் உறுதியுமளித்தது. 

பரணகம ஆணைக்குழு, அதற்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச ஆணைக்குழு மீது எமக்கு நம்பிக்கையில்லாத நிலையில் உள்ளக விசாரணையில் எப்படி நம்பிக்கைவைக்க முடியும்? எனவே சர்வதேச மேற்பார்வையுடனான உள்ளக விசாரணையே இடம்பெறவேண்டும். இதனைவிடுத்து இந்த அரசு தவறான பாதையில் பயணிக்க முயன்றால் மகிந்த ஆட்சிக்கு ஏற்பட்ட நிலையே இந்த ஆட்சிக்கும் ஏற்படும். 

ஆனால் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதை  நாம் விரும்பவில்லை. உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும். அப்போது தான் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை ஐக்கியப்படுத்தி பாதுகாக்க முடியும் என்றார்.
« PREV
NEXT »