Latest News

March 09, 2015

சுட்டால் என்ன -ரணிலின் இனவாதம்
by admin - 0

கச்சதீவு இலங்கைக்கே சொந்தம். எங்கள் மீனவர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டால் எங்கள் சட்டம் ஏற்றுக்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.    இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.    மேலும் கூறியதாவது,    இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இருப்பினும், இந்தியமீனவர்கள் கோருவது போல், இலங்கையின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு அனுமதி அளிக்க முடியாது.  

  எங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அவர்கள் எப்படி உரிமை கோர முடியும். நாங்கள் ஒருவேளை இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க வேண்டும் என்றும்  ஆழ்கடல் மீன்பிடி படகுகளை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் உரிமை கோரினால் அதற்கு ஒப்புதல் கிடைக்குமா?    அவ்வாறான சூழல் இருக்கும்போது இந்திய மீனவர்கள் ஏன் இங்கு வந்து மீன் பிடிக்க விரும்புகிறார்கள்.    கச்சதீவு ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இந்திய மீனவர்கள் எவ்வாறான படகுகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் மீன் பிடிக்கலாம் என புரிந்துணர்வு உள்ளது. 

அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடர முடியும்.    கச்சதீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு தீர்வாகும் என தமிழகம் கருதலாம். ஆனால், கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசின் நிலைப்பாடும் அதுவே.    கச்சதீவு எங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதி. அங்கு மீன்பிடிப்பவர்கள் வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களது மீனவர்கள். 

ஒப்பந்தத்தை மீறி, இந்திய மீனவர்கள் புத்தளம் வரை வந்து மீன் பிடிக்கிறார்கள்.    இது மிகப் பெரிய பிரச்சினை. இதனால், எங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்தபோது மட்டுமே இந்திய மீனவர்கள் புத்தளம் பகுதியை விட்டுவைத்தனர். இல்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து அங்கு மீன்பிடித்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள்.  

  தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு உரிமை கோருவதற்கு அங்குள்ள அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம்.    இந்திய மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோரை இலங்கைக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 2009க்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீனவர்கள் சிலர் ஆயுதங்களை வழங்கி வந்தனர்.   

 அவ்வாறு ஆயுதங்கள் வழங்க இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறும் மீனவர்களே சுடப்பட்டிருக்கின்றனர். 2009க்குப் பிறகு எவ்வித துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.  
 இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறாமல் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடந்திருக்காது. அத்துமீறிவிட்டு மனித உரிமை மீறல்கள் பற்றி பேசுவதில் நியாயமில்லை. ஒன்றிரண்டு அப்பாவி மீனவர்களும் சுடப்பட்டிருக்கலாம். அதை மறுக்கவில்லை.    ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே அவர்கள் இருந்திருந்தால் எவ்வித துப்பாக்கிச் சூடும் நடந்திருக்காது.

 என் வீட்டுக்குள் யாராவது அத்துமீறி நுழையும்போது அவரை நான் சுட்டால் என் நாட்டின் சட்டதிட்டம் அதை ஏற்றுக்கொள்ளும். மீனவர் பிரச்சினைக்கும் இது பொருந்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.    

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
« PREV
NEXT »

No comments