புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் இன்று கிளிநொச்சி பளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியால் முன்னெடுகப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில்,
தன்னெழுச்சியாக திரண்டு வந்திருக்கின்ற இன்றைய பெண்கள் நாளின் திரட்சியை பார்க்கின்றபோது நமது நாளைய நாட்கள் மீது நம்பிக்கை எழுகின்றது. எமது பெண்கள் தாய்மார்கள் இன்றைக்கும் கண்ணீரோடு தங்கள் பிள்ளைகளை தேடி அலைவதும் உண்ணாவிரதம் இருப்பவர்களாக இருக்கின்றார்கள்.
இன்றைக்கு புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. அண்மையில் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு செவ்வியின்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் பொறுப்பற்ற தன்மையுடையவர் என தெரிவித்தார்.
வடக்கு மகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை வைத்துக்கொண்டு ரணில் விக்கிமசிங்க, முதலமைச்சர் பற்றி பொறுப்பற்ற விதத்தில் பேசியுள்ளார். இந்த ஒரு தலைவராக இருந்து கொண்டு இப்படி அவர் சொல்லியிருப்பது அவரது இனவாத மனப்பாங்கில் எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களின் கருத்துக்கள் தமிழ்மக்களின் கருத்துக்களாக பார்க்கப்பட வேண்டியவை. மாவை.சேனாதிரராசா அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டால் அது தமிழ் மக்களின் கருத்துக்களாக பார்க்கப்பட வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க முதலமைச்சரோடு தான் பேசத்தேவையில்லை. பா.உறுப்பினர்களோடுதான் பேசுவேன் என்பது ஒரு நாட்டுத்தலைவர் கூறும் கருத்துக்கு பொருத்தமானதல்ல. முதமைச்சர் வேறு, நாங்கள் வேறு அல்ல. முதலமைச்சர் எமது மக்களால் எங்களால் தெரிவு செய்யப்பட்டவர். அதனால் அவர் கூறும் கருத்துக்கள் தமிழ் மக்களின் கருத்துக்கள்.
சிங்கள தலைமைகளின் சிந்தனையில் இனியேனும் மாற்றம் வேண்டும். இல்லையெனில் இந்த நாடு அபாயத்துள் வீழ்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவிடும்.
இதே ரணில் விக்கிரசிங்கவின் காலத்திலும் இவருடைய ஐ.தே.கட்சியின் காலத்திலும் தமிழ் மக்கள் மீது அதிகளவான இனப்படுகொலைகள் இனக்கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதையும்.சமாதான ஒப்பந்த காலத்தில் நயவஞ்சகமாக விடுதலைப்புலிகள் அமைப்பை சிதைத்ததையும் நாம் மறந்துவிடவில்லை. எனவே மக்கள் மிகக்தெளிவாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Social Buttons